அமைச்சர்களுக்கு பின் வரிசையில் நீதிபதிகளா? தலைமை நீதிபதி பதவியேற்பு விழா சர்ச்சை

நீதிபதிகளுக்கு இது போன்ற அவமதிப்பு முதல் முறையல்ல என்பதையும் தனது வாட்ஸ்-அப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.

அருண் ஜனார்த்தனன்

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு பின் வரிசையில் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கியது சர்ச்சை ஆகியிருக்கிறது.

சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக விஜயா கம்லேஷ் தஹில்ரமானி நியமனம் செய்யப்பட்டார். இவருக்கான பதவிப் பிரமாணம் சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுனர் மாளிகை தர்பார் மண்டபத்தில் நேற்று (ஆகஸ்ட் 12) நடைபெற்றது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார் தஹில் ரமணி To Read, Click Here

புதிய தலைமை நீதிபதி விஜயா கம்லேஷ் தஹில்ரமானிக்கு தமிழ்நாடு ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதியும், இதற்கு முன்பு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவருமான இந்திரா பானர்ஜி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஹூலுவாடி ரமேஷ், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மேடையில் இருந்தனர்.

தமிழ்நாடு அமைச்சர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் என பலரும் விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். இந்த பதவியேற்பு விழா முடிந்ததும் சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகளில் ஒருவரான எம்.எஸ்.ரமேஷ் வெளியிட்ட ஒரு ‘வாட்ஸ் அப்’ தகவல் பலரது கவனத்தை ஈர்த்தது.

அந்த ‘வாட்ஸ் அப்’ மெசேஜில் மேற்படி விழாவில் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ். அமைச்சர்கள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோருக்கு பின்னால் நீதிபதிகள் உட்கார வைக்கப்பட்டது குறித்து புகார் கூறியிருக்கிறார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்.

நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் இந்தப் பதிவை பணியில் இருக்கும் நீதிபதிகள் இடையிலான அதிகாரபூர்வ வாட்ஸ்-அப் குழுவில் தெரிவித்திருக்கிறார். இந்தக் கருத்தை தொடர்ந்து வேறு பல நீதிபதிகளும் அவரை தொடர்புகொண்டு இந்த விஷயத்தில் தங்கள் கவலையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

‘ராஜ் பவன் விழா ஏற்பாட்டாளர்களின் இந்த செயல்பாடு அதிருப்திக்கு உரியது மட்டுமல்ல, கவலைக்கு உரியதும்கூட. அரசமைப்பு பதவிகளுக்கும், போலீஸ் அதிகாரிகளுக்கும் இடையிலான புரொட்டகால் நடைமுறைகளை ராஜ் பவன் அறியவில்லையா? அல்லது, மாண்புமிகு அமைச்சர்களுக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் பிந்தைய ‘ரேங்க்’கில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் இருப்பதாக புரிந்து கொண்டிருக்கிறார்களா?

ஒரு அரசு நிகழ்ச்சியில் பதவிகளுக்கான புரொட்டகால் பின்பற்றப்பட வேண்டுமே தவிர, தனிப்பட்ட நபர்களுக்கானதுஅல்ல. இதில் இரண்டாம் கருத்தே இருக்க முடியாது.’ என கூறியிருக்கிறார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

பதவியேற்பு விழாவுக்கு முன்னதாக இருக்கை ஏற்பாடுகள் குறித்து பார்வையிடச் சென்ற உயர் நீதிமன்ற பதிவாளர் உள்ளே அனுமதிக்கப்படாதது குறித்தும் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் சுட்டிக் காட்டியிருக்கிறார். ‘அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, நீதிபதிகளுக்கு நேர்ந்த அவமதிப்பும்கூட. இதற்கான விளக்கம் தரப்பட வேண்டும்’ என கூறியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ்.

வழக்கமாக நீதிபதிகள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் புரொட்டகால் நடைமுறைகளை உயர் நீதிமன்றப் பதிவாளரும், சார்பு செயலாளர் அந்தஸ்தில் உள்ள அரசு அதிகாரி ஒருவரும் கவனிப்பார்கள். சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆர்.கண்ணப்பனுக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் விசாரித்தபோது, பதிவாளரை விழா அரங்கினுள் நுழைய அனுமதிக்காததை உறுதி செய்தனர்.

எம்.எஸ்.ரமேஷ் உள்ளிட்ட நீதிபதிகளை வெகுவாக பாதித்த அம்சம் என்னவென்றால், பல மூத்த போலீஸ் அதிகாரிகளும், ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் முன் வரிசைகளில் இருந்தனர். மேடையில் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆளுனரின் செயலாளர் ராஜகோபால் அமர்ந்திருந்தார். ராஜகோபாலுக்கு நெருக்கமானவராக அறியப்படும் டிஜிபி அந்தஸ்திலான ஜாங்கிட் ஐபிஎஸ், நீதிபதிகளுக்கு முன் வரிசையில் இருந்தார்.

ஆளுனரின் செயலாளர் ராஜகோபால் ஐ.ஏ.எஸ்.ஸிடம் இது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸுக்காக கேட்டபோது, ‘நீதிபதிகளின் புகாரை நான் பார்க்கவில்லை. பின்னர் இது குறித்து பதில் சொல்கிறேன்’ என்றார். தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயன் கூறுகையில், ‘இது ஆளுனர் மாளிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி, அரசு ஏற்பாடு செய்தது அல்ல’ என்றார்.

‘வழக்கமாக விழா அரங்கில் ஒருபக்கம் நீதிபதிகளும், இன்னொரு பக்கம் அமைச்சர்களும் அமருவதுபோல இருக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். இந்த நிகழ்ச்சிக்கு புதிய தலைமை நீதிபதியின் சொந்த மாநிலமான மஹாராஷ்டிராவில் இருந்து நிறைய விருந்தினர்கள் வந்திருந்தார்கள்.

மஹாராஷ்டிரா நீதிபதிகள் 30 பேர், புதிய தலைமை நீதிபதியின் உறவினர்கள் பலர் வந்திருந்தார்கள். மரபுப்படி பிற மாநிலத்தில் இருந்து வந்த நீதிபதிகளுக்கும், உறவினர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்று யார் பெயரையும் குறிப்பிட்டு விஐபி சீட்கள் ரிசர்வ் செய்யப்படவில்லை என்பதும் உண்மை. ஆளுனர் மாளிகையின் தர்பார் ஹால் ஒப்பீட்டளவில் மிகச் சிறியது. 150 பேரை அது தாங்குவதே கடினம்.’ என்றார் விஜய் நாராயன்.

நீதிபதிகளுக்கு இது போன்ற அவமதிப்பு முதல் முறையல்ல என்பதையும் தனது வாட்ஸ்-அப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார் நீதிபதி எம்.எஸ்.ரமேஷ். ‘இந்த ஆண்டின் தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் திருக்கல்யாண நிகழ்ச்சியில் அமைச்சர்களுக்காகவும், அரசியல்வாதிகளுக்காகவும் நீதிபதிகள் அவர்களது இருக்கைகளில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். அது குறித்து நான் கவலையை பகிர்ந்து கொண்டதற்கு இன்னும் பதில் இல்லை’ என கூறியிருக்கிறார் எம்.எஸ்.ரமேஷ்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close