பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்களும், தொண்டர்களும் அஞ்சலி | Indian Express Tamil

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி

மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.

பேராசிரியர் க.அன்பழகன் மறைவு: கீழ்ப்பாக்கம் இல்லத்தில் தலைவர்கள்-தொண்டர்கள் அஞ்சலி
K Anbazhagan Death, DMK general secretary

DMK General Secretary K.Anbazhagan : திராவிட முன்னேற்ற கழகத்தில் 42 ஆண்டுகள் பொதுச்செயலாளராக பதவி வகித்த பேராசிரியர் க.அன்பழகன், வயது மூப்பு காரணமாக இன்று (07.03.2020) அதிகாலை மறைந்தார்.

பேராசிரியர் க.அன்பழகன் மரணம் Live: அரசியல் தலைவர்கள் அஞ்சலி

இவர் 1922 ஆம் ஆண்டு, டிசம்பர் 19-ம் தேதி அன்று திருவாரூர் மாவட்டத்திலுள்ள காட்டூர் கிராமத்தில், எம். கல்யாணசுந்தரனார் – சுவர்ணம்பாள் தம்பதிக்கு மூத்த மகனாக பிறந்தார். அவரது இயற்பெயர் ராமையா. பின்னாளில் மறைமலையடிகளாரின் தனித் தமிழ் இயக்கத்தின் மீது கொண்ட ஈடுபாட்டால், தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார். அவரது தந்தை தீவிர பெரியார் தொண்டன். ஆகையால் தன்னையும் சுயமரியாதை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். அவரது கனீர் குரலும், தெளிவான பேச்சும் பலரை கட்டிப் போட்டது.

எம்.ஏ. முடித்த அன்பழகன் 1944-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியில் சேர்ந்தார். அவர் வகுப்பெடுக்கும் போது திராவிடர் இயக்க கருத்தரங்கு போல இருக்குமாம். அவரின் தமிழைக் கேட்க, மற்ற வகுப்பு மாணவர்களும் வெளியில் நின்றுக் கொண்டிருப்பார்களாம். அதன்பிறகு 1957-ல் எழும்பூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிக் கண்ட அவர், 9 முறை சட்டமன்ற உறுப்பினர், 1 முறை சட்ட மேலவை உறுப்பினர், 1 முறை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார். இதற்கெல்லாம் மேலாக 42 ஆண்டுகளாக திமுக-வின் பொதுச்செயலாளராக இருந்தார்.

அன்பழகனை அண்ணன் என அன்போடு குறிப்பிடுவார் கலைஞர். திமுக சந்தித்த பல சோதனை தருணங்களிலும், நம்பிக்கைக்குரிய பலர் கலைஞரை விட்டு பிரிந்த போதும், அவருக்கு துணையாக நின்றவர் அன்பழகன். அவரின் மறைவு திமுக தொண்டர்களை பெரும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. திமுக தொண்டர்களும், மற்ற கட்சி தலைவர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

புதுப்பிக்கப்பட்ட தங்க ரதம் ரயில் – டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பேராசிரியரின் கீழ்ப்பாக்கம் இல்லம் 

கீழ்பாக்கம் நியூ ஆவடி ரோடு, வாட்டர் டேங்க் அருகிலுள்ள அவரது இல்லத்தில் அன்பழகனின் உடல் வைக்கப்பட்டுள்ளது. அங்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், எ.வ.வேலு, தயாநிதிமாறன், கனிமொழி, சேகர் பாபு, ஜெ.அன்பழகன், தங்கம் தென்னரசு உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும், தொண்டர்களும் குழுமியிருக்கிறார்கள். இவர்களுடன் பேராசிரியர் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, நல்லக்கண்ணு, முத்தரசன், வைகோ, திருநாவுக்கரசர் உள்ளிட்ட மற்ற கட்சித் தலைவர்களும் அங்கே வருகை புரிந்திருக்கிறார்கள். கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர்கள் ரஜினிகாந்த், சத்யராஜ் உள்ளிட்டவர்களும் அன்பழகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

திமுக தலைமை கழகமான அறிவாலயத்தில் அரைக் கம்பத்தில் கொடி பறக்க விடப்பட்டுள்ளது. அன்பழகனின் மறைவையொட்டி 7 நாள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்பழகனின் உடல் இன்று மாலை 4.45 மணிக்கு கீழ்ப்பாக்கம் இடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

 

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: K anbazhagan death dmk cadres tribute funeral at kilpauk