தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுடன் நேற்று சென்னையில் இருந்து தூத்துக்குடி வரை ஒரே விமானத்தில் சோபியா எனும் மாணவி பயணித்தார். இவர் கனடாவில் படித்து வருகிறார். விமானத்தில் தமிழிசையை பார்த்தவுடன் “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாக கூறப்படுகிறது. தமிழிசையே இதை உறுதிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த செயலுக்கு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழிசை புகார் அளித்தார். அதன் பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் சோபியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
மேலும் படிக்க : விளம்பரத்திற்காக இப்படி செய்யலாமா? - சோபியா குறித்து அமைச்சர் ஜெயக்குமார்
அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சோபியாவிற்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி, தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.
சோபியா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட, பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "பொது இடங்களில் குரல் எழுப்புவதும், விமர்சிப்பதும் குற்றமெனில் அத்தனை அரசியல்வாதிகளும் கைது செய்யப் படவேண்டிய குற்றவாளிகளே. சுதந்திரப்பறவை சோபியாவை சிறையிலிருந்து பெயிலில் எடுக்கிறோம். அரசியல்வாதிகள் ஏன் வெளியே திரிகிறார்கள்?
நானும் அரசியல்வாதிதான் என்பதை உணர்ந்தே சொல்கிறேன்." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த கருத்திற்கு ட்விட்டரில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.