மக்கள் நீதி மய்ய தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கல்லூரி மாணவ மாணவிகளின் அமைப்பான ரோட்ட ராக்ட் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, தமிழக அரசியல் குறித்தும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை விமர்சிக்கும் வகையில், 'சட்டப்பேரவைக்கு நான் செல்ல நேர்ந்தால், சட்டையைக் கிழித்துக் கொண்டு வரமாட்டேன். அப்படியே, கிழிந்தாலும் புது சட்டை அணிந்து கொண்டு தான் வெளியே வருவேன்' என்றார்.
இதற்கு திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில், கமல்ஹாசனை மிகக் கடுமையாக விமர்சித்து இன்று கட்டுரை எழுதப்பட்டிருந்தது. உதயநிதி ஸ்டாலினும், 'கமல்ஹாசனுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' என்று தெரிவிக்க, நேரடியாக அதுவும் முதன் முறையாக, திமுக - கமல் மோதல் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இது இன்னும் அடுத்தக்கட்டத்திற்கு செல்லும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில், அதே கல்லூரி நிகழ்வில் கமல்ஹாசன் பேசிய மற்றொரு விவகாரம், அகில இந்திய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்ந்த தாக்குதல் பற்றியும், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் இறந்தது குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த கமல்ஹாசன், "ஏற்கனவே இந்த நாட்டை இரண்டாக கிழித்து விட்டோம். அதனால், ஏன் மீண்டும் பாகிஸ்தானோடு பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது? காஷ்மீரில் ஏன் இந்திய அரசு பொதுவாக்கெடுப்பு நடத்த மறுக்கிறது?, ஏன் அரசு பயப்படுகிறது? ஆசாத் காஷ்மீர் பகுதியில், ஜிகாதிகளின் படங்களை ரயில்களில் ஹீரோவாக சித்தரித்து பயன்படுத்துகின்றனர். அது மிகப்பெரிய முட்டாள்த்தனம். அதேபோன்றதொரு முட்டாளத்தனத்தை இந்திய அரசும் செய்கிறது. ஒட்டுமொத்தமாக, நோக்கம் என்பது தேசத்தை பிரிக்க வேண்டும். அவ்வளவு தான்.
இரு நாட்டு அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தினாலே எந்த ராணுவ வீரரும் பலியாக மாட்டார்கள். " என்று பதிலளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க - கமல் மற்றவர் சட்டையை தான் கிழிக்க வைப்பார் - தி.மு.க பதிலடி
இதில், காஷ்மீரை 'ஆசாத் காஷ்மீர்' என்று கமல்ஹாசன் கூறியிருப்பது தான் வடஇந்திய மீடியாக்களில் விவாதப் பொருளாகி இருக்கிறது. 'அது எப்படி காஷ்மீரை பிரிக்க வேண்டும் என்ற தொனியில் கமல்ஹாசன் பேசலாம்? அப்போ, அவர் பிரிவினைவாதியா?' என்ற ரீதியில் விவாதங்கள் சென்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, ஒரு தனியார் செய்தி நிறுவனத்தின் இச்செய்தி குறித்த தலையங்கம் அதிர்வை உண்டாக்கியது
விவகாரம் தேசிய அளவில் பெரிதாவது போல் தெரிந்தவுடன், மக்கள் நீதி மய்யம் சார்பில் தற்போது மறுப்பு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "கமல்ஹாசனின் கருத்து அந்த சேனலில் திரித்து கூறப்பட்டிருக்கிறது. அவர் சொன்ன அர்த்தம் வேறு. ஒட்டுமொத்த காஷ்மீரும் இந்தியாவுடன் ஒன்றிணைந்த பகுதியே. சுயநலமின்றி நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களுக்கும், மத்திய காவல் படைக்கும் எப்போதும் மக்கள் நீதி மய்யம் துணை நிற்கும்" என்று அந்த அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், தான் பிரிவினைவாதி அல்ல என்பதை கமல்ஹாசன் தெளிவுப்படுத்தி இருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.