காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க திமுக தயாராகியிருப்பதாகவும், 12 தொகுதிகளுக்கு குறையாமல் பெற காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதாகவும் இறுதிகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தவிர, திமுக கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
இந்தநிலையில், டெல்லியில் நேற்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, திமுக எம்.பி. கனிமொழி சந்தித்துப் பேசினார். மு.க.ஸ்டாலினின் உத்தரவின் பேரில் கனிமொழி சென்று இந்த ஆலோசனையில் ஈடுபட்டார். அதில், காங்கிரஸுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது குறித்து நீண்ட நேரம் விவாதம் நடைபெற்றது.
நாடாளுமன்றத் தேர்தலில், குறைந்தபட்சம் 12, அதிகபட்சம் 16 தொகுதிகள் கேட்க காங்கிரஸ் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த, 2014ல் நடந்த மக்களவை தேர்தலில், காங்கிரஸ் தனித்து போட்டியிட்டு, 4.32 சதவீதம் ஓட்டுக்கள் பெற்றது. அதன் பின், காங்கிரஸ் உடைந்து வாசன் தலைமையில் தமிழ் மாநில காங்கிரஸ் உருவானது. 2014ல் போட்டியிட்ட 39 காங்கிரஸ் வேட்பாளர்களில் தற்போது 13 பேர், த.மா.கா.,வில் உள்ளனர்.
எனவே, காங்கிரஸ் வாக்கு பலத்தின் அடிப்படையில், தமிழகத்தில் 6 தொகுதிகள், புதுச்சேரி ஒன்று என, மொத்தமாக ஏழு தொகுதிகளை ஒதுக்க தி.மு.க., தலைவர் ஸ்டாலின் விரும்புவதாக தெரிகிறது.
இந்தச் சூழலில் டெல்லியில் இன்று பிற்பகலில் தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர்களை தனது இல்லத்துக்கு அழைத்து ராகுல் காந்தி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், முன்னாள் மாநிலத் தலைவர்கள் தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக கனிமொழியுடன் பேசிய விவரங்கள் குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டதாக தெரிகிறது. இதன் அடிப்படையில் தொகுதி எண்ணிக்கை ஏறக்குறைய முடிவாகிவிட்டதாக தெரிகிறது. பாண்டிச்சேரி உள்பட காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஒதுக்க திமுக தயாராகியிருப்பதாகவும், 12 தொகுதிகளுக்கு குறையாமல் பெற காங்கிரஸ் ஆர்வம் காட்டுவதாகவும் இறுதிகட்டத் தகவல்கள் கூறுகின்றன.
'கூட்டணி அமைப்பு மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில், அதிமுக எக்ஸ்பிரஸ் ரயில் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது, திமுக சரக்கு ரயில் வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கிறது' என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கும் சூழலில், திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு இன்று உறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கூட்டணிப் பேச்சுவார்த்தையில் இழுபறியா? அமித் ஷா சென்னை வருகை திடீர் ரத்து!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.