மாலத்தீவில் நடந்த தீ விபத்தில் கன்னியாகுமரியைச் சேர்ந்த கணவன் மனைவி உயிரிழந்துள்ளனர். அவர்களது உடலை இந்தியா கொண்டு வர உறவினர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாலத்தீவின் தலைநகர் மாலேயில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியின் தரை தளத்தில் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. திடீர் தீ விபத்தில் பற்றிய தீ மழ, மழவென தொழிலாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பு பகுதியில் பரவியது.
இதையும் படியுங்கள்: தமிழகத்தில் வெள்ளி, சனிக்கிழமைகளில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்
தீயை அணைக்க தீயணைப்பு படையினர் கடும் முயற்சி செய்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் 10 பேர் பலியாகினர். இதனையடுத்து, மரணம் அடைந்தவர்கள் உடலை மீட்கும் பணியில் தீ அணைப்பு படையினர் ஈடுபட்டனர். 10 பேரின் உடலை மீட்டு தரை தளம் பகுதிக்கு தீயணைப்பு வீரர்கள் கொண்டு வந்ததாக அந்த நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது
தீ விபத்தில் பலியான 10 பேரில் 8 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 2 பேர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். இறந்த இருவர், கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த காஞ்சிரங்கோடு என்னும் ஊரை சேர்ந்த கணவன், மனைவியான ஜெனில் – சுந்தரி ஆவர்.
இந்த நிலையில், தீ விபத்தில் பலியான கணவன், மனைவியின் உடலை கன்னியாகுமரி கொண்டு வர குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்களது உறவினர்கள், மற்றும் ஊரார்கள், குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்தை தொடர்பு கொண்டு மாலத்தீவில் மரணம் அடைந்த கணவன் மனைவியின் பூத உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார்கள்.
இதனையடுத்து குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் அதிகாரிகளுடன் தொடர்பு கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
த.இ.தாகூர், கன்னியாகுமரி
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil