DMK Chief M Karunanidhi Health: கருணாநிதிக்கு காய்ச்சல் இருக்கிறது. நோய்த் தொற்று இருக்கிறது. ஆனாலும் ஆபத்து இல்லை என்பதுதான் மருத்துவர்களும், கோபாலபுரம் குடும்பத்தினரும் இப்போதைக்கும் சொல்லும் நிம்மதி தகவல்! மு.க.ஸ்டாலினும் இதை உறுதி செய்தார்.
திமுக தலைவர் மு.கருணாநிதி, 95 வயதை எட்டிய நிலையில் தனது கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருந்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அவரது தொண்டைக் குழாயை மாற்றும் சிகிச்சை நடந்தது.
கருணாநிதி ஹெல்த் ரிப்போர்ட
அதன்பிறகு கோபாலபுரம் வீடு திரும்பிய கருணாநிதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அப்போது அவரது உடல்நிலை குறித்து வதந்திகள் கிளம்பின. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அது குறித்து அளித்த பேட்டியில், ‘தலைவர் கலைஞருக்கு லேசான காய்ச்சல்தான். அதிர்ச்சி அடையக்கூடிய வகையிலோ, பயப்படும் வகையிலோ ஒன்றும் இல்லை’ என கூறினார்.
கருணாநிதி உடல்நலம் Live Updates: 'காய்ச்சல், நோய்த் தொற்று குறைகிறது, உடல் நிலையில் முன்னேற்றம்’- மு.க.ஸ்டாலின்
இந்த சூழலில் ஜூலை 25 முதல் மீண்டும் அவரது உடல்நிலை சற்றே மோசமடைந்தது. ஜூலை 26 வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்றம் அருகே ராஜா அண்ணாமலை மன்றத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. கடைசி நேரத்தில் ஸ்டாலின் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி அருகே அவர் நின்று கவனிப்பதாக தொண்டர்களுக்கு கூறப்பட்டது. கருணாநிதியின் மற்றொரு மகன் மு.க.அழகிரியும் அன்றே கோபாலபுரம் வந்து கருணாநிதியை பார்த்தார். கருணாநிதியின் மகளும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழியும் கோபாலபுரம் சென்றார்.
கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் முதல்முறையாக அதிமுக தலைவர்கள்: ‘கலைஞர் நன்றாக இருப்பதாக’ பேட்டி
மொத்த குடும்பத்தினரும் கோபாலபுரத்தில் முகாமிட்டதாலும் கருணாநிதி உடல் நிலை குறித்து தொண்டர்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில் காவேரி மருத்துவமனை சார்பில் ஜூலை 26 வியாழன் மாலை ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘திமுக தலைவர் கருணாநிதி வயோதிகம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கிறார். அவரது சிறுநீரக பாதையில் நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதால் காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அவரது இல்லத்திலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன.
கருணாநிதியை 24 மணி நேரமும் மருத்துவர்கள் தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள். அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரை நேரில் பார்க்க யாரும் வரவேண்டாம்’. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் அடிப்படையிலான தொண்டர்கள் மட்டுமல்லாமல், அவரது தமிழுக்கே உலகம் முழுவதும் அபிமானிகள் உண்டு. நட்பு பேணுவதிலும், புதிய நட்புகளை உருவாக்குவதிலும் கருணாநிதிக்கு நிகரான தலைவர் இந்த தலைமுறையில் இல்லை. எனவே உலகம் முழுவதும் இருந்து கருணாநிதியின் பால் அன்பு கொண்டவர்கள் அவரது உடல்நிலை குறித்து விசாரித்தபடி இருக்கிறார்கள்.
‘காய்ச்சல் இருக்கிறது. நோய்த் தொற்று இருக்கிறது. ஆனாலும் ஆபத்து இல்லை’ என்பது கோபாலபுரம் இல்லத்தின் பதில்!