கலைஞர் எனும் கலகக்காரர் மத்திய அரசுடன் ஒத்துழைப்பாரா என்று கேட்ட இந்திரா காந்தி

சட்டசபை விழாவில் கலந்துகொண்ட இந்திராவிற்கு தக்க பதிலளித்த கருணாநிதி

கருணாநிதி, கலைஞர் கருணாநிதி

இந்திரா காந்தி – கலைஞர் கருணாநிதி சவாலான சட்டசபை சந்திப்பு 

அண்ணா இறந்த பின்பு 1969ல் ஆட்சிக்கு வந்தார் கருணாநிதி. முதல்வராக அவர் பொறுப்பேற்றிருந்ததை அறிந்த இந்திரா காந்தி “கலைஞர் கலகக்காரர் ஆயிற்றே, மத்திய அரசுடன் எப்படி ஒத்துழைப்பார்” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்நிகழ்வு கலைஞரின் காதிர்ற்கு எட்டியது.

பின்னர் சட்டமன்றத்தில் அண்ணாவின் புகைப்படத்தை திறந்து வைக்க வந்திருந்தார் இந்திரா காந்தி. அச்சமயத்தில் “திராவிடக் கழகம் மத்திய அரசுடன் சண்டையிட்டுக் கொள்ளுமோ, கலகத்தில் ஈடுபடுமோ என்ற சந்தேகம் உங்களுக்கு இருப்பதை நான் அறிவேன். உறுதியாக சொல்கிறேன் நாங்கள் மத்திய அரசின் உறவுக்கு கை கொடுப்போம். அதே நேரத்தில் உரிமைக்குக் குரல் கொடுப்போம்” என்று கூறினார் கருணாநிதி.

திருவாரூர் தேர் செப்பணிட்டது தொடர்பாக

இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த கருணாநிதிக்கு நிறைய சவால்கள் இருந்தன. மேலும் மக்கள் இத்தனை வருடங்களாக கொண்டிருந்த இறை நம்பிக்கைக்கு பங்கம் ஏதும் வராமல் பகுத்தறிவு பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் என்று சொல்லிக் கொண்டுதான் அரியணை ஏறினார் கலைஞர்.

அவர் வந்த பின்பு திருவாரூர் தேர் செப்பணிடப்பட்டு விழா கொண்டாடியது திமுக. இறை நம்பிக்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்து ஆட்சியைப் பிடித்துவிட்டு ஆன்மிகத்தை திணிக்கிறது திமுக என்றார்கள்.

அதற்கு “தேர் நான்கு நாட்களுக்குத் தான் ஓடும். ஆனால் 4 லட்சம் ரூபாய் செலவிட்டுப்பட்டு அதற்காக போடப்பட்ட சாலைகளை மக்கள் ஆண்டுகளுக்கும் பயன்படுத்துவார்கள்” என்றார் கருணாநிதி.

பெரியாருக்கு அரசு மரியாதை

பெரியாரின் மரணத்தை ஒட்டி அரசு மரியாதை செலுத்த அனுமதி கேட்ட போது, அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த சபாநாயகம் ஐ.ஏ.எஸ்  “எந்த அரசுப் பொறுப்பிலும் ஈடுபடாதவருக்கு எப்படி அரசு மரியாதை செய்வது?”  என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு கலைஞர் “மகாத்மா காந்திக்கு ஏன் அரசு மரியாதை கொடுத்தீர்கள்?” அப்போது என்று கேள்வி கேட்டார்

பதில் கூறிய சபாநாயகம் “He is the father of the nation” என்றார்.

கலைஞரின் பதில் சபாநாயகத்தை ஸ்தம்பிக்க வைத்தது “Periyar is the father of Tamil Nadu, father of our DMK government என் ஆட்சியே கலைக்கப்பட்டாலும் சரி பெரியாருக்கு அரசு மரியாதை கொடுத்து அஞ்சலி செலுத்த வேண்டும்” என உத்தரவிட்டார்.

ராஜாஜி அரங்கில் தொடங்கியது கருணாநிதியின் இறுதி ஊர்வலம்

திருச்செந்தூர் முருகன் சிலையும் கோவிலும் எம்.ஜி.ஆரின் சட்டசபையில் கருணாநிதியின் உரை

1980ல் திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அறநிலையத்துறை துணை ஆணையர் ஒருவர் இறந்து போக விசாரணை கமிஷன் நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு, அதன் முடிவுகளை சட்டமன்றத்தில் வெளியிடுவதற்கு முன்பு கருணாநிதியின் பத்திரிக்கையில் வெளியானது. அச்சமயம் எம்.ஜி.ஆர் முதல்வராக பணியாற்றினார்.

பால் கமிஷன் என்ற கமிசனின் முடிவினை வெளியிடச் சொல்லி வலியுறுத்தினார் கருணாநிதி. மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்று எம்.ஜி.ஆர் அரசு கூற, இறந்தவருக்கு நீதி வேண்டி மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரை 200 கி.மீ நடைபயணம் மேற்கொண்டார் கருணாநிதி.

தேர்தலில் தோல்வி அடைந்ததால் துவண்டு கிடந்த தொண்டர்களுக்கு உத்வேகம் அளித்தது அந்த நடைபயணம்.

மீண்டும் சட்டசபைக்கு வந்து சேர்ந்தார் கருணாநிதி. அவரின் திருச்செந்தூர் நடைபயணத்தை நகைக்கும் வகையில் “திருச்செந்தூர் வேலைத் தேடி நடைபயணம் சென்ற கருணாநிதி அங்கு வேலனையே காணவில்லை என்பது வருத்தம் அளிக்கும்” என்று குறிப்பிட்டார் அதிமுக உறுப்பினர்.“மேலும் தலைவரைக் காண வேலன் ராமாவரம் வந்துவிட்டார்” என்றும் குறிப்பிட்டார்.

பதில் அளித்த கருணாநிதி “இது நாள் வரை வேல் மட்டும் தான் திருச்செந்தூரில் காணாமல் போய்கொண்டிருந்தது. இப்போதும் வேலன் சிலையும் காணாமல் போனது என்பதை அதிமுக உறுப்பினர் குறிப்பிட்டு பேசுகிறார் ”என்றார் கலைஞர்.

காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகியுடனான உரை

கலைஞர் விலைவாசி உயர்வை எதிர்த்து ஒருநாள் போராட்டம் நடத்தி அதற்காக ஜெயில் சென்று வந்ததைப்பற்றி குறிப்பிட்டார். அதற்கு அனந்தநாயகி “அப்படி ஜெயிலுக்குப் போனதால் தான் தற்போது நீங்கள் சட்டசபையில் அமர்ந்திருக்கிறீர்கள்” என்று பதில் கூறினார்.

கலைஞர் அதற்கு “அதனால் தான் நாங்கள் யாரையும் தற்போது சிறையில்  வைப்பதில்லை. பிடித்தவுடன் விடுதலை செய்துவிடுகிறோம்” என்று குறிப்பிட்டார்.

கருணாநிதி அவர்களின் பேச்சு என்றுமே எதிர்கட்சியினரையும் ரசிக்கும்  வகையில் தான் இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். சட்டசபைகளில் மட்டுமல்லாது பத்திரிக்கையாளர்கள் சந்திப்பிலும் கூட சுவாரசியமான  பதிலகளை கொடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வல்லமை கொண்டவர் அவர் என்பதில் சந்தேகமே இல்லை.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Karunanidhis intelligent replies to the opponents

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express