கருணாஸ் தலைமறைவு: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக தாக்கிப் பேசினார்.
'நான் யார் தெரியுமா? என்ன செய்து விடுவாய்? இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம்?.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா... ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன்.
நம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று உத்தரவு போடுகிறாய். எங்க ஆட்கள் கையை உடைத்தால், உன் கை, காலும் உடைக்கப்படும்" என்றார்.
கருணாஸ் தலைமறைவு: நான் ஓடி ஒளிய மாட்டேன் - கருணாஸ்
கருணாஸின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கருணாஸ், "நான் எங்கும் தலைமறைவாகவில்லை. ஓடி ஒளிய மாட்டேன். எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்.
நான் பேசிய 47 நிமிட வீடியோ யூட்யூபில் உள்ளது. முழுவதையும் கேட்டால் நான் தவறாக பேசியதாக சொல்லமாட்டீர்கள். பத்திரிக்கை விவகாரத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். ஒருமையில் பேசியது தவறு தான். எந்த சமுதாயத்திற்கும் நான் எதிரி கிடையாது. நேரம் வரும் போது ஐகோர்ட் தலைமை நீதிபதியிடம் இதுகுறித்து விளக்கம் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார்.
தலைமறைவாக உள்ள கருணாஸை 3 தனிப்படை அமைத்து தேடி வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட நிலையில், அவர் தனது வீட்டில் இருந்தே செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.
எஸ்.வி.சேகரை போலீசார் தேடி வருவது போலவும், ஹெச்.ராஜாவை தேடி வருவது போலவும், கருணாசையும் போலீசார் தேடிக் கொண்டிருப்பார்கள் என்று சமூக தலங்களில் பலரும் கருத்து கூறி வருகின்றனர்.
மேலும் படிக்க: முதல்வர் எடப்பாடியே நான் அடிச்சுடுவேனோ-னு பயப்படுறார் - கருணாஸ்