திமுக.வில் இணைந்த செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் தொடர்பான விமர்சனங்களை தவிர்த்தார். மக்கள் விருப்பப்படி திமுக.வில் இணைந்ததாக கூறினார்.
டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் அமைச்சர் கரூர் வி.செந்தில் பாலாஜி இன்று (டிசம்பர் 14) திமுக.வில் இணைந்தார். அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
‘தொண்டர்களை அரவணைத்துச் செல்பவரே சிறந்த தலைவராக இருக்க முடியும். மாண்புமிகு அம்மாவின் மறைவுக்கு பிறகு தளபதி அவர்களின் தலைமைப் பண்பு என்னை ஈர்த்ததால், தளபதி முன்னிலையில் அடிப்படை உறுப்பினராக இணைத்துக் கொண்டேன்.
Read More: அறிவாலயத்தில் செந்தில் பாலாஜி: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுக.வில் இணைந்தார்
அம்மா மறைவுக்கு பிறகு இன்னொரு இயக்கத்தில் பணியாற்றிய நான் தொண்டர்களின் கருத்துப்படி இங்கு இணைந்திருக்கிறேன். இபிஎஸ்-ஓபிஎஸ் அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இருக்கிறது. என்னுடன் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் திமுக.வில் இணைந்திருக்கிறார்கள்.
எப்போது தேர்தல் வந்தாலும் இபிஎஸ்.-ஓபிஎஸ் அரசை தூக்கி எறிந்து, அன்புக்குரிய தளபதி அவர்களை முதல்வராக மக்கள் அமர வைப்பார்கள். சில பத்திரிகைகளில் செய்தி வருவதைப் போல பல இயக்கங்களில் நான் இருக்கவில்லை. சுயேட்சையாக கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வென்ற நான், பிறகு அம்மா தலைமையை ஏற்று அதிமுக.வில் இணைந்தேன். இப்போது தளபதி தலைமையை ஏற்றிருக்கிறோம்.’ என கூறிய செந்தில் பாலாஜி, டிடிவி தினகரன் தொடர்பான விமர்சனங்களை தவிர்த்தார்.
அதேசமயம் இபிஎஸ்-ஓபிஎஸ் அரசு மீது மட்டும் சாடினார். டிடிவி தினகரன் தொடர்பான கேள்வியை நிருபர்கள் எழுப்பியபோது, ‘ஒரு தலைமையின் கீழ் நாங்கள் பணியாற்றியிருக்கிறோம். இப்போது விமர்சனம் வைப்பது நாகரீகமாக இருக்காது’ என்றார்.
தொடர்ந்து, ‘18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் முதல் முறையாக தீர்ப்பு வந்தபோதே தேர்தலை சந்திக்கலாம் என முதல் கருத்தை சொன்னதே செந்தில் பாலாஜிதான். 18 சட்டமன்ற உறுப்பினர்களில் 17 சட்டமன்ற உறுப்பினர்களை நான் வாருங்கள் என அழைக்கவில்லை. நான் எங்கள் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகள், மக்கள் விருப்பப்படி இன்று திமுக.வில் இணைந்திருக்கிறேன்’ என்றார் செந்தில் பாலாஜி.
தொடர்ந்து, ‘ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இயங்கும் இயக்கம் ஒரு மூழ்கும் கப்பல். அதில் பயணிக்க லட்சோப லட்சம் தொண்டர்கள் விரும்பவில்லை. குறுக்கு வழியில் முதல்வர் பொறுப்பை ஏற்ற இபிஎஸ், இந்த ஆட்சி முடிகிற வரை அரசியலில் இருப்பார். பிறகு எடப்பாடியில் விவசாய வேலையை பார்க்க சென்றுவிடுவார்.
ஒரு மாதமாக நான் இருந்த இயக்கத்தில் இருந்து ஒதுங்கியிருந்தேன். இப்போது இந்த முடிவை எடுத்திருக்கிறேன்.’ என்ற செந்தில் பாலாஜி, ‘ஏற்கனவே இருந்த இயக்கத்தின் தலைமை குறித்தும் என்னுடன் பணியாற்றியவர்கள் குறித்தும் கருத்து கூறுவது நல்ல மரபாக இருக்காது.’ என்றார் செந்தில் பாலாஜி