Khushbu Sundar: இன்றைய அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான பெயர் குஷ்பு சுந்தர் தான். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தமிழக அரசியலில் பங்காற்றி வரும் குஷ்பு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் ஆதரவாளராக அறியப்பட்டவர். அவரின் ஜெயா டிவி-யில் ‘ஜாக்பாட்’ என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய குஷ்பு, விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
‘பெயர், புகழுக்காக இங்கு வரவில்லை’ காங்கிரஸில் இருந்து விலகுவதாக குஷ்பு அறிவிப்பு
இதற்கிடையே 2007-ம் ஆண்டு வெளியான ‘பெரியார்’ திரைப்படத்தில் மணியம்மையாக நடித்திருந்தார் குஷ்பு. அதிலிருந்து பல நேர்க்காணல்களில் தன்னை பெரியாரிஸ்ட் என்றே அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னர் 2010, மே 14-ம் தேதி திமுக-வில் தன்னை இணைத்துக் கொண்டார் குஷ்பு. அப்போதைய முதல்வர் கருணாநிதியும், கட்சித் தொண்டர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால் அப்போது முதல் குஷ்பு மீது சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில், திமுக-வின் அடுத்த முதல்வர் வேட்பாளராக ஸ்டாலின் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என குஷ்பு கொடுத்த ஒரு பேட்டி, அவருக்கு பெரும் சிக்கலை தந்தது. இந்த பேட்டி திமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில் திருச்சிக்குப் போன குஷ்பு மீது தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள் திமுக தொண்டர்கள். சென்னையில் குஷ்புவின் வீடு கல்வீச்சு தாக்குதல்களுக்கு உள்ளானது. சில காலம் எதிர்ப்புகளுடன் திமுக-வில் வண்டி ஓட்டிய குஷ்பு, 2014 ஜூன் 16-ம் தேதி அக்கட்சியிலிருந்து தான் விலகுவதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
மாணவர்களுக்கு இலவச லேப்டாப், ஸ்மார்ட்ஃபோன்: வெப்சைட் தொடங்கிய 12-ம் வகுப்பு மாணவி!
அதன் பின்னர் தேசிய கட்சியான காங்கிரஸில் ஐக்கியமானார். அங்கும் அவருக்கு பிரச்னைகள் ஓய்ந்தபாடில்லை. நடிகை நக்மாவுக்கும் குஷ்புவுக்கும் பகிரங்க மோதல் வெடித்தது. தமிழக மகிளா காங்கிரஸ் பொறுப்பாளர் பதவியில் இருந்து நக்மா நீக்கப்பட்டதற்கு குஷ்பு தான் காரணம் எனக் கூறப்பட்டது. அதோடு தமிழக காங்கிரஸிலும் அவர் மீதான சர்ச்சைகள் நீடித்தது. இருப்பினும் டெல்லி செல்வாக்கோடு செய்தித் தொடர்பாளராக வலம் வந்தார். இந்நிலையில் இன்று காங்கிரஸில் இருந்து விலகிய குஷ்பு, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜக-வில் இணைகிறார்.
ஆரம்பத்தில் தன்னை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக் கொண்ட குஷ்பு, அதற்கு எதிரான ஐடியாலஜி கொண்ட கட்சியில் இப்போது இணைந்துள்ளார். தனித்துவம் மாறாமால் இருப்பாரா குஷ்பு? பொறுத்திருந்து பார்ப்போம்...
“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”