திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வருகிற 23 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ‘எங்கள் முதல்வர் எங்கள் பெருமை’ எனும் முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாற்று புகைப்படக் கண்காட்சி நடைபெற உள்ளது.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் திருச்சி தி.மு.க.,வினர் செய்து வருகின்றனர். இந்த திடலை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்ததாவது; தனக்கு மருத்துவமனை, கல்லூரி இருப்பதாக அண்ணாமலை கூறி இருப்பது குறித்த கேள்விக்கு எனக்கு அந்த மருத்துவமனையை வாங்கி தாருங்கள். அதை ஏழு மருத்துவர்கள் நடத்துகிறார்கள்.
இதையும் படியுங்கள்: அண்ணாமலை: கட்டுப்படுத்த முடியாத பீரங்கியா? அல்லது ரகசிய ஆயுதமா?
கட்சி நடத்துவதற்காக வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார் அண்ணாமலை என்றார். அண்ணாமலை வேண்டுமென்றால் வழக்கு தொடரட்டும் அதை சந்திக்க நாங்கள் தயார்.
இந்தக் கண்காட்சி சென்னை அரசு ஆர்ட்ஸ் மற்றும் நடிகர் கவிஞர் ஜோ.மல்லூரியின் ஒருங்கிணைப்பில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது. வரும் 23 ஆம் தேதி காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை இளைய நடிகர் திலகம் பிரபு திறந்து வைக்கின்றார். அதனை தொடர்ந்து 8 நாட்கள் நடக்கும் கண்காட்சியில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் விமல், ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராம் மற்றும் இயக்குனர் லிங்குசாமி போன்றோர் பங்கேற்க உள்ளனர்.
இந்த கண்காட்சி நடத்துவது நோக்கம் தமிழகத்தில் அநேக முதலமைச்சர்கள் ஆட்சி செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பின்புலம் உழைப்பு இருந்துள்ளது. அதுபோல தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்யக்கூடிய தமிழக முதல்வர் கடந்த 40 ஆண்டு காலமாக தன்னுடைய உழைப்பால் இந்த முதலமைச்சர் என்று அங்கீகாரத்தை பெற்றுள்ளார்.

அதனால் அவருடைய வாழ்க்கை பயணங்கள் அடங்கிய இந்த கண்காட்சியானது பல மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கும் அரசியல் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அ.தி.மு.க.,வின் திட்டங்களை தி.மு.க முடக்கவில்லை. தி.மு.க.,வின் திட்டங்களை தான் அ.தி.மு.க முடக்கியது. திருச்சியின் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் வருகிற டிசம்பர் மாதம் திறக்கப்படும். 35 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள கோவை, சேலம், திருச்சி ஆகிய சிறைச்சாலைகள் விரைவில் மாற்றம் செய்யப்பட உள்ளன. கோவை சிறை செம்மொழி பூங்காவாகும். சேலம் சிறை விளையாட்டு திடலாகவும், திருச்சி சிறைக்கு 173 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக ஆட்சியர் மூலம் பார்க்கப்பட்டுள்ளது, விரைவில் ஒப்புதல் பெற்று சிறைச்சாலை மாற்றப்படும். திருச்சி காந்தி சந்தை அதே இடத்தில் 11 கோடி ரூபாய் செலவில் புதுப்பிக்கப்பட்டு செயல்படும் என்று அமைச்சர் கூறினார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது, மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், நடிகருமான ஜோ.மல்லூரி உள்ளிட்டோர் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil