ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு; கோவையில் காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்
கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக என்று முழக்கமிட்டவாறு ரயில் நிலையத்தின் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர்
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி குற்றவாளி என தீர்ப்பு வழங்கியதை கண்டித்து கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ரயில் மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Advertisment
பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தேசிய செயலாளர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர், காங்கிரஸ் கொடியை கையில் ஏந்தி மோடி ஒழிக, மத்திய அரசு ஒழிக என்று முழக்கமிட்டவாறு ரயில் நிலையத்தின் தடுப்புகளை தாண்டி உள்ளே செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து திடீர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து வாகனத்தில் அழைத்துச் சென்றனர். கைது செய்யப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil