கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் திருப்பம்; மேலும் சில குற்றவாளிகள் மீது சந்தேகம்
கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம்; விசாரணைக்கு அரசு தரப்பில் அனுமதி கேட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் மனு தாக்கல்
கோவையில் கடந்த 2021 ஆம் ஆண்டு பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போக்ஸோ நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
Advertisment
கோவையில் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மாணவி முதலில் படித்த பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததன் காரணமாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மாணவி, தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாக பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் சம்பவம் தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாணவி எழுதி வைத்திருந்த கடிதம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் சுல்தான் மற்றும் மனோராஜ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீசார், இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல் மற்றும் போக்ஸோ சட்டத்தின் 2 பிரிவுகள் என மொத்தம் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டார்.
மாணவி வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு குற்றபத்திரிக்கை தாக்கல் செய்து வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் 3 பேரிடம் விசாரணை முடிந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கும் என்பதால் மேல் விசாரணைக்கு அனுமதி அளிக்க கோரி அரசு தரப்பில் இன்று போக்ஸோ நீதிமன்றத்தில் புதிதாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ள நிலையில் விசாரணைக்கு அரசு தரப்பில் அனுமதி கேட்டு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதை விசாரித்த போக்ஸோ சிறப்பு நீதிபதி குலசேகரன் இவ்வழக்கை வரும் ஜூன் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பிலும் இந்த வழக்கில் மேலும் ஒரு குற்றவாளியை இந்த வழக்கில் சேர்க்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil