கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கேனுடன் வரும் பொதுமக்களை சோதனையின்போது, அந்தக் கேனில் உள்ள தண்ணீரை குடிக்க வைத்து காவல்துறையினர் சரிபார்த்துக் கொள்கின்றனர்.
குடியரசு தினம் மற்றும் மக்கள் குறைதீர்க்கும் நாளை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்படியாக தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்: உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப் பணிகள்: கேரளா செல்லும் பேருந்துகள் நிற்கும் இடம் மாற்றம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அசம்பாவிதங்கள் ஏதேனும் நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் பொதுமக்களையும் அவர்களது உடைமைகளையும் சோதனையிட்டே அனுமதிப்பர்.
அதே சமயத்தில் இன்னும் இரண்டு தினங்களில் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளதை ஒட்டி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மனு அளிக்க வரும் பொதுமக்களின் உடமைகள் வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் கொண்டு சோதனை செய்யப்படுகிறது.

பல்வேறு சமயங்களில் மனு அளிக்க வரும் பொதுமக்களில் சிலர் தண்ணீர் பாட்டில்களில் மண்ணெண்ணெய் அல்லது பெட்ரோல் போன்றவற்றை எடுத்து வந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சிகள் மேற்கொள்கின்றனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் மனு அளிக்க வந்த நபர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார்.

இப்படி இருக்க இன்றைய தினம் பொதுமக்களிடம் சோதனை மேற்கொள்ளும் காவல்துறையினர் பொதுமக்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலை சோதனை செய்து அதனை பொதுமக்களே குடித்து காண்பிக்க வைத்தனர். அதன் பின்னரே உள்ளே செல்ல அனுமதி அளிக்கின்றனர்.
வழக்கமாக பொதுமக்கள் எடுத்து வரும் பாட்டில்கள் மட்டும் சோதனை செய்யப்பட்ட நிலையில், இன்று சந்தேக நோக்கில் அவர்கள் எடுத்து வரும் தண்ணீர் பாட்டிலின் நீரை குடிக்க வைக்கும் வீடியோ பேசு பொருளாகியுள்ளது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil