கோவை கருமத்தம்பட்டி – கணபதிபாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவர் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. வனப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் சிறுத்தையின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் நிலையில், இரண்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே கணபதிபாளையம் கிராமத்தில் பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் இருந்த ஆடு மற்றும் அருகில் உள்ள கிதாமணி என்பவரது தோட்டத்தில் இருந்த கன்று குட்டி அடுத்தடுத்து மர்மமான முறையில் மர்மவிலங்கு தாக்கி உயிரிழந்தன.
இதையும் படியுங்கள்: கோவை அரசு மருத்துவமனையின் அவலம்: இரவு நேரங்களில் போதிய மருத்துவர்கள் இல்லை..நோயாளிகள் சிரமம்
இதனையடுத்து பொன்னுச்சாமி தோட்டத்தில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. அதில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரியவந்தது. வனப்பகுதியில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த கிராமத்தில் சிறுத்தையின் நடமாட்டம் இருப்பது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கணபதிபாளையம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்து கோவை வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் அப்பகுதியில் பதிவாகி இருந்த காலடி தடங்கள் மற்றும் சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் வனத்துறை சார்பில், இரு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபட்டது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

கௌசிகா நதி ஓரத்தில் தோட்டம் உள்ளது மேலும் இந்த பகுதியில் ஏராளமான மான்கள் இருப்பதால் வழி தவறி வந்த சிறுத்தை ஆடு மாடுகளை அடித்திருக்கலாம் உடனடியாக வனத்துறையினர் அது சிறுதையா அல்லது வேறு ஏதாவது மிருகமா? என கண்டறிய வேண்டும் வலியுறுத்தி உள்ளனர்.
வனப்பகுதியில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கருமத்தம்பட்டி கணபதிபாளையம் கிராமத்திற்குள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது அப்பகுதி விவசாயிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பி.ரஹ்மான், கோவை
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil