கோயம்பேடு காய்கறி சந்தை செப்.28-ல் திறப்பு: விதிமுறைகள் என்னென்ன?

கீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9ம் எண் நுழைவு வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்

By: August 27, 2020, 10:23:56 PM

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இன்று மாலை தமிழக துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவியது கண்டறியப்பட்டதை தொடர்ந்து அதனை கட்டுப்படுத்தும் விதமாக அங்கு இயங்கிவந்த கனிகள் மற்றும் மலர் அங்காடிகள் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியிலும், காய்கறிகள் மற்றும் மொத்த தானிய விற்பனை அங்காடிகள் மே மாதம் முதல் வாரத்திலும் தற்காலிகமாக மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அத்தியாவசிய தேவைகளான காய்கறிகள் மற்றும் கனிகள் பொதுமக்களுக்கு தொடர்ந்து தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்யும் நோக்கத்துடன் தற்காலிகமாக மொத்த காய்கறி அங்காடி திருமழிசையிலும், கனி அங்காடி மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்திலும் செயல்பட தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அவை செயல்பட தொடங்கின.

தமிழகத்தில் ஒரே நாளில் 5,981 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியது

மேலும், சில்லறை காய்கறி விற்பனையானது ஆங்காங்கே உள்ள மாநகராட்சி மைதானங்களிலும், பேருந்து நிலைங்களிலும், சில சாலையோர பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. மலர் அங்காடியானது வானகரம் பகுதியில் உள்ள அருள்மிகு கைலாசநாதர் மற்றும் வைகுந்த பெருமாள் திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலத்தில் தற்காலிகமாக நடைபெற்று வருகிறது.

தற்காலிக சந்தைகளானது நகரப்பகுதியிலிருந்து தொலைவில் அமைந்துள்ளதாலும், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தற்காலிக சந்தைகள் உள்ள பகுதிகளில் மழை நீர் வெகுவாக தேங்க வாய்ப்பு உள்ளதாலும், அப்பகுதியில் வியாபாரம் செய்வது கடினம் என்பதாலும் வணிகர் சங்க பிரதிநிதிகள் கடந்த ஜூலை 14 அன்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும், ஆகஸ்டு 24 அன்று முதல்வர் எடப்பாடி.மு.பழனிசாமியையும் நேரில் சந்தித்து கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை திறந்திட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து, துணை முதல்வர் ஓபிஎஸ் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தை இன்று (27.08.2020) நேரில் ஆய்வு செய்து அங்கு நடைபெற்று வரும் சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளான சாலைகளை சரி செய்தல், சுற்றுச்சுவர் கட்டுதல், கழிப்பிடங்களை சீரமைத்தல், மின்விளக்குகளை மாற்றியமைத்தல் போன்ற பல்வேறு பணிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது, இப்பணிகளை விரைந்து முடிக்குமாறு உயர் அலுவலர்களை அறிவுறுத்தினார்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தில் இன்று மாலை தமிழ்நாடு துணை முதல்வர் தலைமையில் உயர் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக உணவுதானிய மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 18 அன்றும்,

காய்கறி மொத்த விற்பனை அங்காடியை செப்டம்பர் 28 அன்றும்,

அதன்பிறகு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி, கனி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகளை திறக்க முடிவு செய்யப்பட்டது.

அவ்வாறு அங்காடிகளை திறக்கும் சமயத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒரு வழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்டு வாகனங்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலிருந்து கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள ‘B’ சாலை வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டு இடதுபுறமாக திரும்பி, ‘E’ சாலை வழியாக மலர் அங்காடிக்கு அருகில் உள்ள காலி இடத்தில் வாகனங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே கொள்முதல் செய்வதற்கு அங்காடிக்குள் ஒன்றன்பின் ஒன்றாக அனுமதிக்கப்படும்.

அங்காடிக்கு வரும் அனைத்து கனரக சரக்கு வாகனங்களும் ‘A’ சாலையை ஒட்டி அமைந்துள்ள கனரக வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஒரு கடைக்கு ஒரு சமயத்தில் ஒரு கனரக வாகனம் மட்டுமே அங்காடிக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டு சரக்குகளை இறக்கி, அந்த வாகனம் வெளியில் சென்ற பிறகு அந்த கடைக்கு அடுத்த வாகனம் செல்ல அனுமதிக்கப்படும்.

கடைகளுக்கு வெளிபகுதிகளில் மற்றும் அங்காடியின் வேறு எந்த பகுதிகளிலும் சரக்குகளை இறக்கி வைப்பது மற்றும் வியாபாரம் செய்வது அனுமதிக்கப்படாது.

கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6.00 மணியிலிருந்து இரவு 10.00 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும்.

அவ்வாகனங்கள் சரக்குகளை இறக்கி வைத்தபின் அன்றைய தினமே இரவு 12.00 மணிக்குள் அங்காடியை விட்டு வெளியில் சென்றுவிட வேண்டும்.

சில்லறை விற்பனைக்காக கொள்முதல் செய்ய வரும் இலகு ரக வாகனங்கள் அதிகாலையிலிருந்து நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே அங்காடிக்குள் அனுமதிக்கப்படும்.

அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர பயணிகள் ஆட்டோ மற்றும், இரு சக்கர வாகனங்கள் செல்ல முற்றிலும் அனுமதி இல்லை.

தனி நபர் கொள்முதல் முழுவதுமாக தடைசெய்யப்பட்டுள்ளது. அங்காடிக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படும்.

தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் மருத்துவ துறையினரால் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் இதர பரிசோதனைகள் செய்த பின்னரே அங்காடிக்குள் நுழைய அனுமதிக்கப்படுவர்.

அங்காடிக்குள் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருத்தல் கட்டாயமாக்கப்படும்.

அங்காடியில் உள்ள கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு உரிய அடையாள அட்டைகள் மற்றும் அவர்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வகையில் பின்னல் ஆடைகள் வழங்கப்படும்.

அங்காடிக்குள் நுழையும் வாடிக்கையாளர்கள், விற்பனையாளர்கள், கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் ஆகிய அனைத்து நபர்களும், முகக்கவசம் அணிந்து இருப்பது கட்டாயமாகும்.

முகக்கவசம் இல்லையேல், உள்ளே கண்டிப்பாக அனுமதிக்கப்படமாட்டார்கள். அதேபோல, தனிநபர் இடைவெளி கடைபிடிக்கவேண்டியது மிகவும் கட்டாயமாக்கப்படும்.

11 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் தனபால் காணொலியில் விசாரணை!

கீரைகள் மற்றும் வாழை இலைகள் விற்பனை ஏற்கனவே இயங்கி வந்த 9ம் எண் நுழைவு வாயிலில் உள்ள கடைகளில் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

சாலையோர விற்பனை முற்றிலும் தடை செய்யப்படும்.

கடை உரிமையாளர்கள், பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்காகவும், போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் மற்றும் தனிநபர் இடைவெளியை உறுதி செய்யும் வகையிலும், காவல் துறையினரின் சேவைகள் பயன்படுத்தப்படும். அவர்களுக்கு உதவி செய்ய தனியார் நிறுவனங்கள் மூலம் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேற்கண்ட விதிமுறைகளை மீறும் கடை உரிமையாளர்கள் மற்றும் தனிநபர்கள் மீது உரிம விதிமுறைகளின் அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

வாரத்தில் ஒரு நாள் அங்காடிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு சுத்தம் செய்தல் மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Koyambedu market september 28 opening regulations ops tn government

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X