கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட சாதி (எஸ்.சி) பெண்ணை திருமணம் செய்த தனது மகன் மற்றும் மகனுக்கு ஆதரவளித்த தனது தாய் ஆகியோரை வெட்டிக் கொன்ற தண்டபாணி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தண்டபாணி வெட்டியதில் காயமடைந்த அவரது மருமகள் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. அவரது மகன் சுபாஷ் திருப்பூரில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுசுயா என்பவரை கடந்த 15 நாட்களுக்கு முன்பு பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார். சுபாஷ் நாடார் (BC) சமூகத்தைச் சேர்ந்தவர், அனுசுயா SC சமூகத்தைச் சேர்ந்தவர். இவர்களது காதல் மற்றும் திருமணத்திற்கு சுபாஷின் தந்தை தண்டபாணி எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்: பா.ஜ.க ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்: திருநாவுக்கரசர் எம்.பி
இந்தநிலையில், தண்டபாணியின் தாயார் கண்ணம்மாள் தனது பேரனையும் அவரது மனைவியையும் வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டைக் கொண்டாட அழைத்தார். தம்பதிகள் வியாழக்கிழமை அருணபதி கிராமத்திற்கு வந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தண்டபாணி சனிக்கிழமை காலை கண்ணம்மாள் வீட்டுக்குச் சென்று தம்பதியை வெட்டினார். அவரைத் தடுக்க முயன்ற அவரது தாயையும் அவர் வெட்டினார். பின்னர் தண்டபாணி அங்கிருந்து தப்பியோடினார்.
அக்கம்பக்கத்தினர், மூவரையும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, கண்ணம்மாள் மற்றும் சுபாஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் உறுதி செய்தனர். அதேநேரம் அனுசுயாவின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ஊத்தங்கரை சப்கோர்ட் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் அமர் ஆனந்த் மருத்துவமனைக்கு சென்று அனுசுயாவிடம் வாக்குமூலம் பெற்றார். வழக்கு பதிவு செய்யப்பட்டு, தண்டபாணியை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்தநிலையில் தண்டபாணி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்படுவதற்கு முன் தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil