scorecardresearch

பா.ஜ.க ஊழல் பட்டியலையும் அண்ணாமலை வெளியிட வேண்டும்: திருநாவுக்கரசர் எம்.பி

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போற போக்கில் புழுதி வாரி இறைப்பது போல் புகாரினை கூறக்கூடாது. ஆதாரத்துடன் வெளியிட வேண்டும்; திருச்சி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி பேச்சு

thirunavukkarasar
திருச்சி ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் திருநாவுக்கரசர் எம்.பி

காங்கிரஸ் முன்னாள் எம்.பி ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதற்கும், நாட்டின் பல்வேறு துறைகளை அம்பானி, அதானி குழுமத்திற்கு விற்கும் பா.ஜ.க அரசை கண்டித்தும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் போன்றவை நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தலைமையில் ரயில் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

இதையும் படியுங்கள்: முசிறி: குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் வீட்டில் விஜிலன்ஸ் ரெய்டு

முன்னதாக சுமார் 300-க்கும் அதிகமான காங்கிரஸ் தொண்டர்கள் திருச்சி ரயில்வே ஜங்ஷன் முன்பாக கூடியிருந்த நிலையில் திருநாவுக்கரசர் தலைமையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். பின்னர், ரயில் நிலையத்தை முற்றுகையிட முன்வந்தபோது காவல் துறையினருக்கும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போராட்டம் நடத்த வருபவர்கள் எல்லை தாண்டி வரக்கூடாது என்பதற்காக போடப்பட்டிருந்த ரோப் கயிரோடு நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசரை தள்ளி அழுத்தினர். இதனால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்திருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

ரயில் நிலையத்தை முற்றுகையிடுவதற்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய எம்.பி திருநாவுக்கரசர் தெரிவித்ததாவது;

ராகுல் காந்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டதுடன், அவருக்கான அலுவலகத்தை பறித்து இன்று அவரை பாரதிய ஜனதா கட்சி நடுரோட்டில் நிறுத்த முயற்சி செய்துள்ளது. ஆனால் சட்ட ரீதியாக நீதிமன்றம் வாயிலாக மக்கள் மன்றம் வாயிலாக நாங்கள் இதனை வெல்வோம்.

சர்வாதிகாரப் போக்கினை கையில் எடுத்துக்கொண்டு பா.ஜ.க தொடர்ந்து ராகுல் காந்திக்கு அழுத்தத்தை கொடுத்து வருகிறது. இதற்கெல்லாம் ராகுல் காந்தியோ காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் ஒருபோதும் பயப்பட போவதில்லை.

பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை போற போக்கில் புழுதி வாரி இறைப்பது போல் புகாரினை கூறக்கூடாது. ஆதாரத்துடன் வெளியிட வேண்டும்.

தி.மு.க அ.தி.மு.க போன்ற பல கட்சிகளை சேர்ந்தவர்களின் சொத்து குவிப்பு, ஊழல் போன்ற பட்டியலை வெளியிடும் அண்ணாமலை பா.ஜ.க.,வில் ஊழல் செய்பவர்களின் பட்டியலையும் வெளியிட்டால் சிறப்பாக இருக்கும் என்பது என் கருத்து.

ஒருவர் மீது குற்றம் சாட்டினால், முறையான ஆதாரங்கள் இருந்து, உச்ச நீதிமன்றம் அவருக்கு தண்டனை வழங்கும் பட்சத்தில் தான் அவரை குற்றவாளி என்று நிரூபிக்க முடியும். அரசியல் காரணத்திற்காக மட்டுமே அண்ணாமலை இதுபோன்று பேசி வருகிறார் என்று கூறினார்.

இந்தப் போராட்டத்தில் ராஜா நசீர் வழக்கறிஞர் சரவணன் மாமன்ற உறுப்பினர்கள் எல்.ரெக்ஸ், ஜவகர் மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் இன்று  (15.04.2023) கோவையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி செல்லக்கூடிய ஜன சதாப்தி ரயிலை மறித்து போராட்டம் நடைபெறும் என காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தொண்டர்கள் கூடினர். கொளுத்தும் வெயிலில் காத்திருந்தபோது, சென்னையில் இருந்து திருச்சி வர வேண்டிய விமானம் காலதாமதமாக வந்ததால், அந்த விமான மூலம் போராட்டத்திற்கு வந்த திருச்சி எம்.பி திருநாவுக்கரசர் ரயில் நிலையம் வரும் முன்பே ரயில் சென்று விட்ட நிலையில் போராட்டம் ரயில் நிலைய முற்றுகை போராட்டமாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Trichy mp thirunavukkarasar says annamalai can reveals bjp corruption list

Best of Express