ராகுல் காந்தியின் பதவியை பறித்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; திருச்சி தமிழ் சங்கத்தில் இன்று நடைபெறும் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக வந்திருக்கிறேன். இது என்னுடைய வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட புத்தகம். இதில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டு அந்த புத்தகத்தை வெளியிடுகிறார். நான் அதில் ஏற்புரை ஆற்றுகிறேன்.
இதையும் படியுங்கள்: காங்கிரஸ், தி.மு.கவின் நட்சத்திரப் பேச்சாளர் கமல்: வானதி தாக்கு
ராகுல் காந்தியின் பதவியை பறித்து சிறைக்கு அனுப்பும் அளவுக்கு அவர் எந்த குற்றமும் செய்யவில்லை. அவர் எந்த ஜாதியையும் தெளிவுபடுத்தி பேசவில்லை. மோடி என பேசியதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி பதவியை பறித்துள்ளார்கள். இது என்னுடைய மனதை கலங்கடிக்க செய்துவிட்டது.
நான் 17 முறை நடைபயணம் மேற்கொண்டு இருக்கின்றேன். ஆனால், ஒரே நடை பயணத்தில் ராகுல் காந்தி அதனை முறியடித்து விட்டார். அவரது கருத்துக்கள் இன்றைக்கு மக்களை சென்றடைந்து வருகிறது. பிரதமராகும் அனைத்து தகுதிகளும் அவருக்கு இருக்கிறது. காங்கிரஸ் வளர காமராஜரின் வழிகளை பின்பற்ற வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறிக்கோள் உடன் வாழ வேண்டும். கொண்ட குறிக்கோளில் இருந்து இளைஞர்கள் பின்வாங்கக் கூடாது. இவ்வாறு குமரி ஆனந்தன் பேசினார்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil