பக்காவா ஸ்கெட்ச் போட்டு நகையை தூக்கிய திருடர்கள்! லலிதா ஜூவல்லரி கொள்ளையர்களின் மற்றொரு வீடியோ

பிரபல வங்கி கொள்ளையனான திருவாரூர் முருகனுக்கு உள்ள தொடர்பு

lalithaa jewellery robbery case video : திருச்சி லலிதா ஜூவல்லரியில் கைவரிசை காட்டிய திருடர்கள் மணிகண்டன் மற்றும் சுரேஷின் மற்றொரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள பிரபல நகைக்கடையான லலிதா ஜூவல்லரியில்  நேற்று முன்தினம் சுவரில் துளை போட்டு ரூ.13 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. முகமூடி அணிந்து கடைக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் சர்வ சாதாரணமாக நகைகளை பைகளில் அள்ளிப்போட்டு கொண்டு சென்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

முதலில் இந்த கொள்ளை சம்பவம் வடநாட்டு இளைஞர்களால் நிகழ்த்தப்பட்டிருக்கும் என போலீசார் சந்தேகித்தனர். கொள்ளையர்களை பிடிக்க திருச்சி மாநகர போலீஸ் கமி‌ஷனர் அமல்ராஜ் தலைமையில் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. அதன் பின்பு தொடர்ந்த விசாரணையில் இது உள்ளூர் திருடர்களின் கைவரிசையாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் 8 மணியளவில் திருவாரூர் அருகே உள்ள விளமல் அடியக்கமங்கலம் சோதனை சாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் மூட்டைகளுடன் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தினர். போலீசாரை பார்த்ததும் இருவரும் தாங்கள் கொண்டு வந்த மூட்டையை வீசியெறிந்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். வாகனத்தை ஓட்டிவந்த நபரைப் பிடித்து விசாரித்தபோது அவன் பெயர் மணிகண்டன் என்பதும் அதே ஊரைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது.

தப்பியோடியவன் பெயர் சுரேஷ் என்பதும் சீராத்தோப்பைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. மணிகண்டன் வைத்திருந்த பையில் இருந்து 5 கிலோ நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீஸ் விசாரணையின் போது மணிகண்டன் பல்வேறு தகவல்களை தெரிவித்தான். லலிதா ஜூவல்லரியில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் தன்னிடம் உள்ளது போக மீதி நகைகள் தப்பியோடிய கூட்டாளி சுரேஷிடம் உள்ளதாக கூறினான். லலிதா ஜூவல்லரி கொள்ளையில் பிரபல வங்கி கொள்ளையனான திருவாரூர் முருகனுக்கு உள்ள தொடர்பு பற்றியும் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளன. இந்நிலையில் தப்பியோடிய சுரேஷை திருச்சி போலீசார் கைது செய்துள்ளனர். கைதான சுரேஷ், மணிகண்டன் உள்ளிட்ட 3 பேரையும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.

லலிதா ஜூவல்லரி கொள்ளை சம்பவம் : கையும் களவுமாக சிக்கிய கொள்ளையன்

ஏற்கனவே நள்ளிரவில் மணிகண்டன் மற்றும் சுரேஷ் முகமூடி அணிந்துக் கொண்டு நகைகளை திருடும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இவர்களின் மற்றொரு வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது. சுரேஷ் மற்றும் மணிகண்டன் இருவரும் திருவாரூரில் வாகன சோதனையில் நிற்காமல் தப்பி செல்லும் வீடியோ காட்சிகள் போலீசாரால் வெளியிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close