Latest Updates Cyclone Gaja: வங்கக்கடலில் உருவாகியிருந்த கஜ புயல் நேற்று அதிகாலை 12.00 மணிக்கு மேல் நாகப்பட்டினத்தில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் கரையைக் கடந்தது. இந்த புயல் குறித்து ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருந்த நிலையில், தமிழக அரசு முன்னேற்பாடுகளை மிக துரிதமாக மேற்கொண்டிருந்தது.
உள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. கஜ புயலினால் தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் போன்ற மாவட்டங்கள் பலத்த சேதங்களை சந்தித்திருக்கிறது. இரண்டு நாட்களில் தமிழகத்தை புரட்டிப் போட்ட கஜ புயல்
பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள் டெல்டா பகுதிகளுக்கு விரைந்தனர். எங்கெல்லாம் தீவிர மீட்பு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது என்பதை உடனுக்குடன் தெரியப்படுத்துகிறது தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்.
மேலும் படிக்க : தமிழக அரசின் முன்னேற்பாடுகளை பாராட்டிய தலைவர்கள்
Latest Updates Cyclone Gaja
03:40 PM : தீவிர கண்காணிப்பால் சேதாரங்கள் தவிர்க்கப்பட்டன
மத்திய கப்பல்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் “தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பெரும் இழப்புகள் தவிர்க்கப்பட்டன” என்று கூறியிருக்கிறார். மேலும் தமிழக அரசு தாக்கல் செய்யும் சேதாரம் தொடர்பான அறிக்கையை பார்வையிட்ட பின்பு தான் மாநில அரசு நிவாரண நிதி அளிக்கும் என்று கூறியிருக்கிறார்.
03 : 30 PM சேதமடைந்த பகுதிகளில் தொடங்கியது கணக்கெடுப்பு
புயலால் சேதமடைந்த பகுதிகளில் கணக்கெடுப்பு தொடங்கியதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார். பயிர்கள், படகுகள் போன்றவற்றின் கணக்கெடுப்பு இன்று தொடங்கப்பட்டது.
03:20 PM முதல்வர் வருகை
கஜ புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை நாளை பார்வையிட இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி
03:15 PM : திருவாரூர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருப்பவர்கள் எண்ணிக்கை
திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் முகாம்களில் மட்டும் சுமார் 205 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு அதில் சுமார் 1,12,251 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அமைச்சர் காமராஜ் கூறியிருக்கிறார்.
01: 45 PM : மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்
19 மற்றும் 20 தேதிகளில் மீனவர்கள் தெற்கு வங்கக் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
01:00 PM : 36 பேரின் உயிரிழப்பு உச்சக் கட்ட வேதனை
கஜ புயலால் பாதிப்பிற்கு உள்ளான பகுதிகளை பார்வையிட்டு வரும் முக ஸ்டாலின் கஜ புயலினை தானே, ஒகி, வர்தா போன்ற புயல்களுடன் ஒப்பிட்டு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றினை பதிவிட்டிருக்கிறார்.
தானே, வர்தா, ஓகி வரிசையில் #CycloneGaja பெரும் சேதம் ஏற்படுத்தி இருப்பதை இன்று டெல்டா மாவட்டங்களில் பார்க்கிறேன்.
அப்பாவி மக்கள் முதல் விவசாயிகள், மீனவர்கள் வரை அனைவரின் வாழ்வாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், 36 பேர் உயிரிழந்திருப்பது உச்சகட்ட வேதனை! pic.twitter.com/criZirJLJ1
— M.K.Stalin (@mkstalin) 17 November 2018
12:45 PM : தஞ்சைக்கு பயணமாகும் முக ஸ்டாலின்
தரங்கம்பாடியை தொடர்ந்து அக்கரைப்பேட்டை, வேதாரண்யம் பகுதிகளில் கடற்கரையோர பகுதிகளை பார்வையிடுகிறார். நாகையைத் தொடர்ந்து தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளை பார்வையிடுகிறார் முக ஸ்டாலின்
12:30 PM : தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நவம்பர் 19, 20, மற்றும் 21 தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
11:30 AM : தஞ்சையில் ஆய்வுப் பணிகள்
தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி.
11:15 AM : புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரில் சிகிச்சை
புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான சிகிச்சைகளை செய்ய மருத்துவக் குழு ஏற்பாடு செய்யப்பட்டுக்கிறது என சுகாதாரச் செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி.
11:10 AM : நாகை விரைந்தார் முக ஸ்டாலின்
நாகை மாவட்டத்தில் இருக்கும் தரங்கம்பாடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார் முக ஸ்டாலின். அங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை -செல்லூர் பகுதிகளில் பாதிப்படைந்த பகுதிகளைப் பார்வையிட்டு, தற்போது பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரித்து நிவாரணப் பொருட்களை வழங்கி வருகிறார் தி.மு.க தலைவர் #தளபதி மு.க.ஸ்டாலின்.#GajaCyclone #DMK #MKStalin pic.twitter.com/3VsslJKq3H
— Padalur Vijay (@padalurvijay) 17 November 2018
11:00 AM : 35ஐத் தொட்டது பலி எண்ணிக்கை
கஜ புயலிற்காக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35ஐத் தொட்டது என மாநில பேரிடர் ஆணையம் தகவல் அளித்துள்ளதாக அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
State Disaster Management Authority puts the death toll during Cyclone Gaja at 35 ; 1,27,448 trees have fallen during the Gaja Cyclone.
— AIADMK (@AIADMKOfficial) 17 November 2018
10:40 AM : கோடியக்கரை வன உயிரினங்கள் சரணாலயம் மூடல்
வேதாரண்யத்தில் இருக்கும் கோடியக்கரை வன உயிரினங்கள் சரணாலயத்தில் கஜ புயலின் காரணமாக மான்கள் நிறைய இறந்துள்ளது. மேலும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானதால் சரணாலயம் மூடப்படுவதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.
10: 30 AM: நிரம்பி வரும் தமிழக அணைகள்
கஜ புயலின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக அணைகளின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. மூன்றாவது முறையாக வைகை அணை நிறைந்துள்ளது. 12000 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
09: 40 AM : இரு சக்கர வாகனங்களில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் அமைச்சர்
தமிழக கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் நாகை மாவட்டத்தில் பாதிப்பிற்கு உள்ளான பல்வேறு பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் நேரில் சென்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
பகுதிகளை இருசக்கர வாகனத்தில் பார்வையிடும் ஓ.எஸ். மணியன்
09:30 AM : அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார்
நாகை மாவட்டத்தில் ஆர்.பி. உதயக்குமார், பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து வருகிறார். போர்கால அடிப்படையில் மின் தட்டுப்பாடு சரிசெய்யப்பட்டு மின் விநியோகம் தரப்படும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறியுள்ளார்.
09:15 AM : நரேந்திர மோடி ட்வீட்
பிரதமர் நரேந்திர மோடி, தமிழகத்தில் கஜவினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பேசியிருக்கிறார். பின்னர் புயலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்கள் விரைவில் மீண்டு வர இறைவனை பிரார்த்தனை செய்வதாக கூறியிருக்கிறார். இது தொடர்பான முழுமையான செய்திகளைப் படிக்க
09:10 AM : கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த கனமழை
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. பழனியில் இருந்து கொடைக்கானல் செல்லும் வழியில் அமைந்திருக்கும் சின்னப்பள்ளம் என்ற பகுதியில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்படைந்திருக்கிறது.
09:00 AM : புதுக்கோட்டையில் மீட்புப் பணிகள் தீவிரம்
மின் வினியோகம் நிறுத்தப்பட்டு இரண்டு நாட்கள் ஆன நிலையில் புதுக்கோட்டைப் பகுதியில் மின் விநியோகம் மற்றும் குடிதண்ணீர் வழங்க மிகவும் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது.
புதுக்கோட்டையில் மட்டும் சுமார் 10,000 மின் கம்பங்கள் சரிவுற்றதாக அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.
08:45 AM : கனமழை
நாகை மாவட்டத்தில் இருக்கும் கோடியக்கரையில் கஜ புயலின் தொடர்ச்சியாக கனமழை நீடித்து வருகிறது. இதன் காரணமாக மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
அதே போல் திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று பல மணி நேரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
08:30 AM : நாகை விரையும் ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் கட்சியின் பொருளாளர் இன்று காலை நாகை மற்றும் வேதாரண்யம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.
08: 15 AM : பள்ளி கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை
சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் இன்று காரைக்காலில் அமைந்திருக்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
08:00 AM : கேரளாவை நெருங்கியது கஜ
நாகையை கடந்து உள் மாவட்டங்களில் நிலை கொண்டிருந்த கஜ புயல் மெல்ல நகர்ந்து தற்போது கொச்சிக்கு தென் கிழக்கே 20 கி.மீ தொலைவில் இருக்கிறது கஜ புயல். அடுத்த 12 மணி நேரத்தில் அரபிக் கடலை அடையும் என வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.