liquor sale madras high court makkal needhi maiam TN Government -
Tasmac: மதுபான விற்பனைக்கு உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
Advertisment
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளை திறக்க அனுமதித்து அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும், ஒருவருக்கு ஒரு பாட்டில் வழங்க வேண்டும், மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் ஒருவருக்கு மது வழங்க வேண்டும், அதற்கு மதுபானம் வாங்குபவரின் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்திருந்தது.
இந்த நிபந்தனைகளை கண்டிப்புடன் பின்பற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி மக்கள் நீதி மையம் கட்சியின் பொதுச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியுமான மவுரியா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், மதுபானத்துக்காக குடிமகன்கள் அண்டை மாநிலங்களுக்கு செல்லக் கூடும் என்பதால் டாஸ்மாக் கடைகளை திறப்பதாக அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையதாக இல்லை எனவும், ஊரடங்கு அமலில் உள்ள போது அனுமதியின்றி அண்டை மாநிலங்களுக்கு செல்பவர்களை தடுக்க வேண்டியது அரசின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் எனக் கூறி வரும் நிலையில், நோய் எதிர்ப்பு சக்தியை குறைக்கும் மதுவை விற்க அனுமதிப்பது, நோய் பாதிப்பை அதிகரிக்கும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளில் மதுபானம் விற்க அரசு விதித்துள்ள நிபந்தனைகள் காகித அளவிலேயே இருக்கும் எனவும், அதிகளவில் மதுவாங்க வருபவர்களால் கொரோனா தொற்று அதிகரிக்க கூடும் எனவும் மனுவில் அச்சம் தெரிவித்துள்ளார்.
மதுக்கடைகளை திறக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”