scorecardresearch

எஸ்.பி.வேலுமணி வழக்கு; ஐகோர்ட் முக்கிய உத்தரவு

டெண்டர் முறைகேடுகள் தொடர்பான வழக்கை ரத்து செய்ய கோரிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மனு; சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

SP Velumani, Tender scam case, AIADMK, TN govt

டெண்டர் முறைகேடுகள் தொடர்பாக அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மீதான வழக்குகளை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்தாக, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்: மதுவில் விஷம் கலந்து மாமனார் கொலை: பணத்தை அபகரிக்க மருமகன் நடத்திய கொடூரம்

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வேலுமணி தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், உயர் நீதிமன்ற நியமித்த அதிகாரி நடத்திய ஆரம்பகட்ட விசாரணையில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமில்லை என்று அறிக்கை அளிக்கப்பட்டது. ஆனால் அதனையும் மீறி, அரசியல் உள்நோக்கத்தோடு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, எனவே ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தப்போது, வேலுமணி தரப்பில் டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் ராஜூ ஆஜராகியிருந்தார். ஆனால், ராஜூ மத்திய அரசின் வழக்கறிஞர், அதுவும் வருமான வரித்துறை சார்பான வழக்குகளில் ஆஜராகுபவர், அவர் எப்படி இந்த வழக்கில் ஆஜராகலாம் என தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆட்சேபம் தெரிவித்தார். மேலும் இந்த மனு தொடர்பாக கூடுதல் மனு தாக்கல் செய்ய அவகாசமும் கோரியிருந்தார்.

மேலும், வேலுமணிக்கு எதிராக பதிவுச்செய்யப்பட்ட இந்த வழக்குகளை ரத்துச் செய்யக்கோரிய மனுக்களை தனி நீதிபதி மட்டுமே விசாரணை செய்ய வேண்டும், இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய முடியாது என்றும் தமிழக அரசு சார்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், இதுதொடர்பான உத்தரவை தலைமை நீதிபதி அமர்வு 2 நாட்களுக்கு பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்திருந்தது. அதன் அடிப்படையில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்குகளை ரத்துக்கோரி வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இடைக்கால உத்தரவு தொடர்பான விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

அதேநேரம், வேலுமணி சார்பாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராக முடியாது என்ற தமிழக அரசின் ஆட்சேபனையை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Madras hc order to former admk minister sp velumani case