கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர் சைமன் ஹெர்குலிஸ் உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Advertisment
கொரோனா வைரஸ் பாதித்து பலியான மருத்துவர் சைமன் ஹெர்குலிஸின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, வேலங்காடு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், ஆம்புலன்ஸ் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதில், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், அவரது உடலை வேலங்காடு மயானத்தில் இருந்து தோண்டி எடுத்து, கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி சத்தியநாராயணன் செல்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு, மருத்துவரின் உடலை தோண்டி எடுத்து கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யக் கோரி அவரது மனைவி அளித்த கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.