புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு புகார் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு
கடந்த 2006 - 11ம் ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சி காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது. 2011ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின், புதிய தலைமைச் செயலகம் கட்டியதில் முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்ட புகார்கள் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
இந்த ஆணையம் அனுப்பிய சம்மனை எதிர்த்து மறைந்த முதல்வர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க. தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிபதி ரகுபதி ஆணையத்தை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதுடன், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, அவற்றை பரிசீலித்து குற்ற நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட்டார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டிட முறைக்கேடு - உயர் நீதிமன்றம் பரிந்துரை
இந்த உத்தரவை எதிர்த்து திமுக தலைவர் ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஹுலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாணசுந்தரம் அமர்வு, புது தலைமைச் செயலக முறைகேடு தொடர்பான புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, புதிய தலைமை செயலக வழக்கில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க இதுவரை ஒரு ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை என திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு அரசு தரப்பில், இந்த முறைகேடு புகார் தொடர்பாக ஆரம்ப கட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விசாரணை முடிந்த பின்னர் தான் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார்.
இதனையடுத்து இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்த நீதிபதிகள், லஞ்ச ஒழிப்புதுறை விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நவம்பர் 9ம் தேதி வரை நீடித்து உத்தரவிட்டனர்.
மேலும் படிக்க : புதிய தலைமைச் செயலகக் கட்டிடம்