சென்னை பல்கலைகழகத்தில் இணை பேராசிரியர்கள் பணிக்கான தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க சென்னை பல்கலைக்கழகத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
நாடு முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் நியமனத்தின் போது, பல்கலைக் கழக அளவில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா அல்லது சம்பந்தப்பட்ட துறை அளவில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுவதா என்ற குழப்பம் நிலவி வந்தது.
இதனால், ஆறு ஆண்டுகள் வரை ஆசிரியர்கள் தேர்வு நடைமுறை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், பல்கலைக் கழக அளவில் இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என, மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என, அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும், பல்கலைக் கழக மானியக் குழு உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் இணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக துறை ரீதியாக ஒதுக்கீடு பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பை ரத்து செய்து, பல்கலைக்கழக அளவில் இடஒதுக்கீடு முறை பின்பற்றுவது குறித்து புதிய அறிவிப்பாணை வெளியிட உத்தரவிடக் கோரியும், தேர்வு நடைமுறைக்கு தடை விதிக்க கோரியும் பாலிமர் சயின்ஸ் துறை இணை பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த உதவி பேராசிரியர் சங்கர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உதவி பேராசிரியர் மற்றும் இணை பேராசிரியர் தேர்வு நடைமுறைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை பல்கலைக் கழகத்திற்கு உத்தரவிட்டார்.
மேலும், மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.