மலேசிய நாட்டின் சோழங்கர் பாம்பன் செர்க்காம் பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவர் சுற்றுலாவுக்காக தமிழ்நாட்டின் மையப் பகுதியான திருச்சிக்கு வந்தவர், மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.
இந்நிலையில் அவர் தங்கியிருந்த ரூமை விட்டு வெகு நேரமாக வெளியே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் விடுதி மேலாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். விடுதி மேலாளர் ஜாகீர் உசேன் கண்டோன்மென்ட் காவல் நிலையத்தினருக்கு தகவல் கொடுத்தார்.
இதையும் படியுங்கள்: கும்பகோணம் தீ விபத்தில் பலியான குழந்தைகள் நினைவிடத்தில் ஓவியக் கண்காட்சி
இதையடுத்து காவல் ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையிலான போலீசார் விடுதிக்கு விரைந்து சென்று, மாற்றுச்சாவி மூலம் அறையைத் திறந்தனர். அப்போது மலேசிய நாட்டு முதியவர் முத்துவேல் படுக்கையில் மர்மமாக இறந்து கிடந்தார்.
இதனையடுத்து அவரது பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இறந்த மலேசியா நாட்டுக்காரர் பிராமணச் சங்கத்தில் பொறுப்பில் இருப்பதும், அங்குள்ள ஒரு அரசியல் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்து பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது. மலேசியா அரசியல் கட்சி பிரமுகர் திடீரென இறந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil