ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம் வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தியதோடு, இந்த நடவடிக்கைக்காக ஆவின் நிர்வாகத்திற்கு நன்றியும் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அனைத்து பகுதிகளிலும் கடந்த பிப்ரவரி 12ம் தேதி ஆவின் தயிர் விநியோகம் முற்றிலுமாக நடைபெறவில்லை. இதனால் முகூர்த்த நாளான அன்றைய தினம் தேவையான தயிருக்கு ஏற்கனவே முன் பணம் செலுத்தி ஆர்டர் கொடுத்திருந்த பால் முகவர்கள் அனைவரும் தங்களிடம் ஆர்டர் கொடுத்த நுகர்வோர்களுக்கு ஆவின் தயிர் விநியோகம் செய்ய முடியாமல் கடும் அவதியுற்றதோடு, கூடுதல் விலை கொண்ட தனியார் பால் நிறுவனங்களின் தயிரை தேடி ஓட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு, அதனால் அதிகமான பொருளாதார இழப்பையும் சந்திக்க நேரிட்டது.
இதையும் படியுங்கள்: மருத்துவக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் குண்டர் சட்டத்தில் கைது; அமைச்சர் மா.சு எச்சரிக்கை
வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றியத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் தொடர் மெத்தனப் போக்கினால் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது தொடர்கதையாக இருப்பதாலும், அதனால் பால் முகவர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து வருவதாலும் இனி இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாவண்ணம் வேலூர் மாவட்ட ஆவின் ஒன்றிய அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் அன்றைய தினம் ஆவின் நிர்வாகத்திற்கு கோரிக்கை முன் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 12ம் தேதி தயிர் விநியோகம் நடைபெறாமல் போன விவகாரத்தில் அன்றைய தினம் பணியில் இருந்த வேலூர் மாவட்ட ஒன்றியத்தின் துணை மேலாளர் உமாமகேஸ்வர் ராவ் என்பவரை பணியிடை நீக்கம் செய்து ஆவின் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வரவேற்பதோடு, ஆவின் நிர்வாக இயக்குனர் திரு. சுப்பையன் ஐஏஎஸ் அவர்களுக்கும், வேலூர் மாவட்ட பொது மேலாளர் திரு. ரவிக்குமார் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
மேலும் இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு நாடகமாக இல்லாமல் ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சினையை கண்டு கொள்ளாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும், குறிப்பிட்ட அந்த ஒப்பந்ததாரர் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் தங்குதடையின்றி, தட்டுபாடின்றி விநியோகம் செய்வதை உறுதிபடுத்தி, பால் முகவர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும் என ஆவின் நிர்வாகத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறோம், என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil