தமிழகம் முழுவதும் தி.மு.க முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டங்கள் நடத்த தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அதன் அடிப்படையில், திருச்சி மாநகர அரியமங்கலம் பகுதி தி.மு.க சார்பில் தி.மு.க.,வின் முன்னாள் பொதுச் செயலாளரும், மறைந்த பேராசிரியருமான அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் 37 வது வார்டுக்கு உட்பட்ட அரியமங்கலம் அமலோற்பவபுரத்தில் நடந்தது.
இதையும் படியுங்கள்: கருணாநிதி குடும்பத்திற்கு விசுவாசம்… உதயநிதி மகன் வந்தாலும் ஆதரிப்போம் – கே.என்.நேரு
இந்த பொதுக்கூட்டத்திற்கு கிழக்கு மாநகர தி.மு.க செயலாளரும், திருச்சி மண்டலம் 3 தலைவருமான மதிவாணன் தலைமை வகித்தார். கூட்டத்திற்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சரும் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது;
திருச்சி அரியமங்கலத்தில் பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா நடத்தப்படுகிறது. இந்த பகுதிக்கு முதன் முதலில் நான் வந்த பொழுது, என்னை எப்படி மக்கள் தம்பி, அண்ணா, பிள்ளை என்று அழைத்தார்களோ அதை அப்படியே நான் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறேன்.
2014 ஆம் ஆண்டு பேராசிரியர் இந்த பகுதியில் எனக்காக வாக்கு சேகரித்ததை நான் நினைவு கூறுகிறேன். பேராசிரியர் 9 முறை சட்டமன்றத்திற்கு பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அரிய பல நல்ல திட்டங்களையும் செயல்பாடுகளையும் செய்து வந்தார். 80 ஆண்டுகாலம் பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். தி.மு.க.,விற்கு சங்கடங்கள் சஞ்சலங்கள் ஏற்படும் போதெல்லாம் மறைந்த தலைவர் கலைஞருக்கு பக்கபலமாக இருந்தார்.
43 ஆண்டுகள் திமுகவின் பொதுச் செயலாளராக இருந்தார். 1942 ஆம் ஆண்டு கலைஞரை சந்தித்தது முதல் அவருடன் நெருங்கிய நட்புடனும் இருந்ததால் குடும்பத்தில் ஒருவராகவும் திகழ்ந்தார். 13 ஆண்டுகள் பேராசிரியராக வேலை பார்த்தவர். மேலவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். இரண்டு முறை பள்ளி கல்வித்துறை அமைச்சராக இருந்தார். அந்த ஆலமரத்தில் சிறு துளியாக நான் தற்பொழுது இங்கு உள்ளேன்.
ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி அறிவித்தபோது பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பேராசிரியர். கலைஞர் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் என அறிவித்தபோது நிதியமைச்சராக இருந்தவர் அவர்.
பேராசிரியர் அன்பழகன் பெயரில் கல்வி திட்டம் செயல்படுத்த ரூ. 2500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார் நம் முதல்வர். அதில் இந்த ஆண்டு ரூ.1400 கோடி பள்ளி கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தக் கூட்டம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கும் வகையில் நாளை நமதே நாற்பதும் நமதே என உறுதிமொழி ஏற்பு கூட்டமாக இருக்க வேண்டும். அண்ணா, கலைஞர், அன்பழகன் ஆகியோர் நிழற்குடைவழியில் தான் தற்போதைய முதல்வர் செயல்பட்டு வருகின்றார். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பேசினார்.
இந்த விழாவில் தலைமைக் கழக பேச்சாளர் கம்பம் செல்வேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சேகரன், பகுதி செயலாளர்கள் தர்மராஜ், விஜயகுமார், சிவகுமார், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர், கருணாநிதி, கங்காதரன் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் தனசேகர் சாந்தகுமாரி சாலமன், குருவி மாரிமுத்து, கயல்விழி, ஞான தீபம், மணிமேகலை, தி.மு.க அரியமங்கலம் பகுதி வட்ட செயலாளர்கள் மற்றும் பகுதி நிர்வாகிகள் ரங்கநாதன், கதிர்வேல், சுரேஷ், ஆனந்த், முருகானந்தம், சிவசக்தி கே.கே.கே கார்த்திக் உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக அரியமங்கலம் பகுதி செயலாளர் நீலமேகம் வரவேற்றார். 37-வது வார்டு வட்ட செயலாளர் தவசீலன் விஸ்வநாதன் ஆகியோர் நன்றி கூறினர்.
க.சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.