கருணாஸ் குறித்து அமைச்சர் ஜெயக்குமார்: முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், எம்.எல்.ஏவுமான கருணாஸ், கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய போது, தி.நகர் துணை ஆணையர் அரவிந்தனை கடுமையாக தாக்கிப் பேசினார்.
‘நான் யார் தெரியுமா? என்ன செய்து விடுவாய்? இந்த அதிகாரம் இருப்பதால் தானே இந்த ஆட்டம்?.. யூனிபார்மை கழற்றி வைத்துவிட்டு வா… ஒத்தைக்கு ஒத்தை பார்த்துவிடலாம். தமிழில் படித்து ஐபிஎஸ் என்ற ஒரே காரணத்திற்காகத் தான் விட்டு வைத்திருக்கிறேன்.
நம்ம தமிழ்க்காரன் என்று பார்த்தால், எங்கள் ஆட்களையே கையை உடை.. காலை உடை என்று உத்தரவு போடுகிறாய். எங்க ஆட்கள் கையை உடைத்தால், உன் கை, காலும் உடைக்கப்படும்” என்றார்.
கருணாஸின் இந்தப் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து, கருணாஸ் தலைமறைவாகிவிட்டதாக கூறப்பட்ட நிலையில், அவரை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த கருணாஸ், 'நான் எங்கும் தலைமறைவாகவில்லை. ஓடி ஒளிய மாட்டேன். எதையும் சந்திக்க தயாராக உள்ளேன்' என்றார்.
லொடுக்கு பாண்டிக்கு நாக்கில் சனி - அமைச்சர் ஜெயக்குமார்
இந்தச் சூழ்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், "நான் அரிச்சந்திரன் என்று கூறியதற்கு நன்றி. லொடுக்குப் பாண்டியாக இருந்து அவர் நாக்கில் சனியாகி விட்டது. அதற்கு என்னென்ன அனுபவிக்கப் போகிறார் என்பதை நிச்சயம் உணர்வார்.
இதுமாதிரி மோசமான, ஒரு கீழ்த்தரமான சட்டப்பேரவை உறுப்பினரை நாடு பெற்றிருக்கிறது என்பது வருத்தப்படக்கூடிய, வேதனைப்படக்கூடிய, கண்டனத்துக்குரிய விஷயம்.
அனைத்து சமூகத்தையும் அவர் கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி கீழ்த்தரமாகப் பேசுவதை ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தப் போக்கு தொடர்ந்தால், இது சமூகத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தும் விஷயமாக அது இருக்கும். அதனால்தான் அதிமுக சார்பில் கண்டித்தோம். தற்போது வழக்கும் போட்டுள்ளோம்.
இந்த விவகாரத்தில் கருணாஸுக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அதிமுக அரசு மீது குற்றம் சாட்டுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஸ்டாலின்" என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும் படிக்க: கருணாஸ் பேசியது என்ன? கைது செய்யுமா காவல்துறை?