Advertisment

மாணவர் சின்னத்துரைக்கு சென்னை ஸ்டான்லி மருத்துவர்கள் சிகிச்சை: அமைச்சர் மா.சு

நாங்குநேரி மாணவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிறப்பு ஏற்பாடுகள்; சென்னை ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்களை வரவழைத்து சிகிச்சையளிக்க ஏற்பாடு - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

author-image
WebDesk
New Update
Minister M Subramanian

அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Advertisment

நாங்குநேரியில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். பிறகு, பள்ளிக்கு வந்த மாணவரிடம் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ’பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன்’: சாதிக்கொடுமையால் பாதிக்கப்பட்ட மாணவருக்கு வீடியோ கால் மூலம் திருமாவளவன் ஆறுதல்

இந்நிலையில், நாங்குநேரியிலுள்ள வீட்டில் மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், நாங்குநேரியில் சாதிய பாகுபாடு காரணமாக அரிவாளால் வெட்டி தாக்கப்பட்ட மாணவனை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சபாநாயகர் அப்பாவு ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாணவனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டதாக தெரிவித்தார்.

மேலும், சிறுவனுக்கு மிகச்சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி உள்ளது. இந்த அறுவை சிகிச்சைக்கு ஸ்டான்லி மருத்துவனை பொருத்தமாக இருக்கும். சிறுவனை இங்கிருந்து சென்னைக்கு அழைத்து செல்வதை காட்டிலும் அங்குள்ள மருத்துவர்கள் இங்கு வந்து 10 நாட்கள் தங்கி சிகிச்சை அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனை முதல்வர், ஸ்டான்லி மருத்துவக்கல்லூரி முதல்வர் பாலாஜியிடம் பேசினார். இன்னும் ஓரிரு நாளில் மருத்துவர்கள் வருவார்கள். சிறப்பு மருத்துவர்கள் கையே புதிதாக ஒட்டும் வகையிலான சிகிச்சையில் டாக்டர்கள் சாதனை புரிந்தவர்கள். இத்தகைய சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.

மேலும் முதல்வர் ஸ்டாலின் ஓய்வுபெற்ற நீதியரசர் கே சந்துரு தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து அதன் வழியாக நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கி உள்ளார். சிறுவனின் தாயிடம் பேசி உள்ளோம். மனு அளித்துள்ளார். ஏதாவது அரசு வேலை வாய்ப்பு வழங்க கோரியுள்ளனர். சிறுவனுக்கு தற்போது 17 வயது தான் ஆகிறது. 18 வயது நிரம்பினால் தான் அரசு பணி செய்ய முடியும். 18 வயதை கடந்தப் பின் நிச்சயம் அரசு சார்பில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். மக்கள் நல்வாழ்வு துறையில் ஏதாவது பணி வழங்குவோம். அவர்கள் குணமடைந்தவுடன் நல்ல உறைவிடப் பள்ளியில் சேர்த்து படிக்க வைப்பதாகக் கலெக்டர் கூறியுள்ளார். அவர்கள் கல்வி தொடரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Ma Subramanian 2 Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment