Advertisment

சாதிப் பெயரை கூறி மிரட்டல்: அமைச்சர் ராஜகண்ணப்பனை ஏன் டிஸ்மிஸ் செய்யவில்லை?

சாதிய வன்மத்துடன் பேசும் ஒருவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கி இருப்பது எத்தகைய சமூக நீதியை நிலைநாட்டும் செயல்?

author-image
WebDesk
New Update
Minister Rajakannappan

Minister Rajakannappan : 29/03/2021 அன்று முதுகுளத்தூர் தொகுதி எம்.எல்.ஏவான அமைச்சர் ராஜ கண்ணப்பனின் இலாகா மாற்றம் செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஒதுக்கப்பட்டது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் பரிந்துரை அடிப்படையில் இலாகா மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

Advertisment

ராஜ கண்ணப்பன் இலாகா அதிரடி மாற்றம்: போக்குவரத்து அமைச்சராக சிவசங்கர் நியமனம்

publive-image

சாதிய வன்மத்துடன் பேசிய அமைச்சர்

முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரனை சாதிப் பெயரைக் கூறி ஒருமையில் பேசியதாக எழுந்த புகார் சர்ச்சையான நிலையில் அவருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. ”நீ சேர்மேனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ. சேர்மன் சொல்வதைத் தான் செய்வ. போன் பண்ணுனா எடுக்க மாட்ட. எஸ்.சி. பட்டியலைச் சேர்ந்த உன்னைய வைத்திருப்பதே தப்பு…உடனே வேற இடத்துக்கு தூக்கி அடிக்கிறேன் பாரு” என்று பேசியுள்ளார் அமைச்சர். பாதிக்கப்பட்ட ஊழியர் பட்டியலினத்தோர் நல ஆணையத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் தெரிய வருகிறது. அமைச்சரின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் பாஜக துணைத் தலைவர் வி.பி. துரைசாமி, எம்.எல்.ஏ எம்.ஆர். காந்தியின் தோள் மீது கை வைக்க, பொது இடம் என்றும் பாராமல் அவரின் கையை தட்டிவிட்டார் காந்தி. அரசியல் நாகரீகம் கொண்ட மாநிலம், சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்டு தமிழர் நலனை முன்னிறுத்தும் மாநிலம் என்று கூறும் கருத்துகள் அனைத்தும் சமீபத்தில் காற்றில் பறந்த வண்ணம் இருக்கிறது என்பதையே இந்நிகழ்வுகள் காட்டுகின்றன.

தோளில் கை வைத்த வி.பி துரைசாமி; அடித்தாரா எம்.ஆர் காந்தி? பா.ஜ.க சர்ச்சை

பட்டியலின அரசு அதிகாரியை சாதியின் பெயரால் இழிவாகபேசி, மிரட்டி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் மீது முதல்வர் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?… சாதி,மதங்களுக்கு அப்பாற்பட்ட சமத்துவபூமியாம் தமிழகத்தில் அமைச்சர் ஒருவரே சாதிய வன்மத்தோடு நடப்பதுதான் உங்கள் சமூகநீதியா? என்று அதிமுக கடுமையான விமர்சனத்தை பதிவு செய்துள்ளது.

"ஒரு பக்கம் சமூக நீதி காக்க முதலமைச்சர் குழு அமைக்கிறார். சாதி மதம் கடந்தது எங்கள் திராவிட மாடல் என்று பெருமையாக பேசுகிறார். ஆனால் அவர் அமைச்சரவையில் இருக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் மீது சாதிய ரீதியான புகார் வந்துள்ளது வெட்கக்கேடானது” என்று மக்கள் நீதி மய்யம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. சமூக நீதி மக்களுக்கான பாடம் தானா… மந்திரிக்கு இல்லையா என்று குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், அரசு ஊழியர் மீது “சாதிய ரீதியிலான தாக்குதலும், பல முறை அவரை ஒருமையில் பேசி அதிகாரத்தை துஷ்பிரயோகமும் செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது” குறிப்பிடப்பட்டுள்ளது.

publive-image

அதிமுக வளர்த்தெடுத்த ராஜகண்ணப்பன்

1991ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதியில் வெற்றி பெற்று அப்போதே பொதுப்பணித்துறை அமைச்சராக பணியாற்றினார். பிறகு சில காரணங்களால் அக்கட்சியில் இருந்து விலகி மக்கள் தமிழ்தேசம் என்ற கட்சியை துவங்கி திமுக கூட்டணியில் இடம் பெற்றார். பிறகு 2006ஆம் ஆண்டு கட்சியை கலைத்துவிட்டு, திமுகவில் இணைந்தார். அதே ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு இளையான்குடி தொகுதியில் வெற்றியும் பெற்றார்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை, 2009ம் ஆண்டு தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் மீண்டும் இணைந்தார். சிவகங்கையில் 2009 நாடாளுமன்ற தேர்தலில் சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பிறகு ஜெயலலிதா மறைவுக்கு பிறகு பன்னீர் செல்வம் அணியில் இருந்தார். திடீரென கட்சிப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு திமுகவில் இணைந்தார்.

தொடர் சர்ச்சையில் ராஜகண்ணப்பன்

2021ம் ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்தே சர்ச்சையில் சிக்கி வருபவர் அமைச்சர் ராஜகண்ணப்பன். திருமாவளவனுக்கு ப்ளாஸ்டிக் சேர் வழங்கியது முதற்கொண்டு சமீபத்தில் சைவ உணவகங்களில் மட்டுமே பேருந்துகளை நிறுத்த வேண்டும் என்று கூறியது வரை அனைத்தும் சர்ச்சையில் முடிய, தற்போது அரசு ஊழியரை சாதிப் பெயர் கூறி ஒருமையில் திட்டியது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு, ராஜ கண்ணப்பனின் பிறந்த நாள் அன்று அவருக்கு வாழ்த்துகள் கூறச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவருமான தொல்.திருமாவளவனுக்கு ப்ளாஸ்டிக் சேர் வழங்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சர் நல்ல சொகுசான நாற்காலியில் அமர்ந்திருக்க திருமாவிற்கு பழைய, உடையும் தருவாயில் இருக்கும் சேர் வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன் பின்னர் விசிக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு, ”கண்ணப்பனுக்கும் திருமாவிற்கும் நீண்ட கால நட்பு உள்ளது என்றும், அவர் திருமாவளவனை அருகில் இருக்கும் இருக்கையில் அமரக் கூறினார். ஆனால் முகம் பார்த்து பேச வசதியாக இருக்குமென்று திருமாவளவன் தான் இந்த ப்ளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து பேசினார்” என்றும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

தீபாவளி பண்டிகையின் போது, அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு தேவையான இனிப்புகளை ஆவினில் இருந்து வாங்குவது வழக்கம். 2021ம் ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது இனிப்புகளுக்கு பதிலாக ரூ. 100 கோடி வருவாய் கொண்ட பெரிய நிறுவனங்களுக்கு மட்டுமே டெண்டர் விடப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது ராஜகண்ணப்பன் அறிவித்தார். மாநில அரசின் ஆவின் இருக்க ஏன் டெண்டர் விட வேண்டும் ? அதுவும் ரூ. 100 கோடி வருவாய் பெரும் நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறியிருப்பது எதற்காக என்று பாஜக தலைவர் அண்ணாமலை தொடர் விமர்சனங்களை முன்வைக்க பிறகு அந்த ”ஏலம் விடும் பணி” கைவிடப்பட்டது.

கடந்த 24ம் தேதி அன்று, தங்கள் உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்று விண்ணப்பிக்கும் உணவகங்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டது தமிழக போக்குவரத்துத் துறை. அதில் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்க வேண்டும் என்பது போன்ற அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. கூடுதலாக சைவ உணவகங்களில் மட்டுமே அரசு பேருந்துகள் நிற்க வேண்டும் என்றும் குறிப்பிடபட்டிருந்த நிலையில் அது சர்ச்சையாக பலரும் தங்களின் விமர்சனங்களை முன்வைக்க பிறகு அந்த விதிமுறையில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி தான் நடைபெறுகிறது. திமுகவைச் சார்ந்தவர்கள் யாராவது தவறு செய்தாலோ, ஒரு சின்ன குற்றத்தில் ஈடுபட்டாலோ, நிச்சயமாக, உறுதியாக, அண்ணா மீது ஆணையாக, கலைஞர் மீது ஆணையாக சொல்கிறேன், இந்த ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பான்” என்று சட்டமன்றத்தில் உரக்க கூறிய முதல்வர் முக ஸ்டாலின் ஏன் இந்த விவகாரத்தில் இலாகா மாற்றத்தை மட்டும் மேற்கொண்டார் என்ற கேள்வியும் தற்போது எழுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment