தீபாவளி பண்டிகைக்கு டாஸ்மாக்கில் ரூ.708 கோடி வசூல் ஆனதாக செய்திகள் வெளியான நிலையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது பல்வேறு பொருட்களின் விற்பனை அமோகமாக நடக்கும். குறிப்பாக ஆடு விற்பனை, கோழி விற்பனை, ஆடை விற்பனை பற்றிய செய்திகள் வெளிவரும். இதில் குறிப்பாக டாஸ்மாக் வசூல் பற்றிய செய்தி தலைப்புச் செய்தியாக வரும்.
இதையும் படியுங்கள்: கோவை காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம்.. 5 பேர் கைது
தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளுக்கு இலக்கு வைத்து டாஸ்மாக் நிர்வாகம் விற்பனை செய்து வருவதாக சில ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது. ஆனால், டாஸ்மாக் நிர்வாகம் அதனை கடுமையாக மறுத்து வந்துள்ளது.
இந்தநிலையில், இந்த ஆண்டு தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு வைக்கப்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியின. அப்போது டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அமைச்சர் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
தற்போது, தீபாவளி டாஸ்மாக்கில் விற்பனை ரூ.708 கோடி வசூலானதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதற்கு மறுப்பு தெரிவித்து மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில்பாலாஜி டவீட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், தீபாவளிக்கு முன்பாக ‘டாஸ்மாக் இலக்கு’ என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிட்டு, அதனைச் சுட்டிக்காட்டிய பிறகு ஊடகங்கள் நீக்கின. தீபாவளி முடிந்தவுடன் நிர்வாகத்திற்கே முழு விவரங்கள் வந்து சேராத சூழலில் ‘விற்பனை விவரம்’ என்று பொய்யான தகவலை மக்களிடம் கொண்டு சேர்க்கின்றன.
அரசு நிறுவனங்கள் மீது தவறான பிம்பத்தை உருவாக்கும் வகையில் உண்மை நிலையை அறியாமலும், குறைந்தபட்ச அறம் கூட இல்லாமலும் ஊடகங்கள் செயல்படுவது தவறு. டாஸ்மாக் மீது உண்மைக்குப் புறம்பான செய்திகளைப் பரப்பி வருவதால் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் பதிவிட்டுள்ளார்.
இந்தநிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “கோவையில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை பற்றி பேச நேரமில்லாத சாராய அமைச்சர், டாஸ்மாக் மூலம் வந்த வருமானத்தை சுட்டிக்காட்டிய பத்திரிகையாளர் மீது நடவடிக்கை எடுப்பாராம். இந்த விற்பனையின் மூலமாக தனக்குக் கிடைக்கும் கமிஷன் வெளியில் தெரிந்துவிடும் என்று சாராய அமைச்சருக்கு அச்சமா?
சாராயம் விற்றுப் பிழைப்பை நடத்தும் உங்களுக்கே இவ்வளவு நெஞ்சுரமிருந்தால், மாதச் சம்பளம் வாங்கிக் கொண்டு உண்மையான செய்திகளை மக்களுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்களுக்கு எவ்வளவு நெஞ்சுரம் இருக்கும்?
கோபாலபுரத்தின் குடும்ப தொலைக்காட்சியான சன் நியூஸ் இந்த சாராய விற்பனை மூலம் வந்த வருமானத்தை செய்தியாக வெளியிட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு தொடுப்பீர்களா? அவர்கள் மீது வழக்கு தொடுத்தாலும், உங்கள் நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழக பா.ஜ.க குரல் கொடுக்கும்.
பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடுவதற்கு முன் அறிவாலயத்தின் அனுமதி பெற வேண்டுமா? அப்படியே உங்களுக்கு வழக்கு தொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் பத்திரிகையாளர்களை விட்டு விட்டு என் மீது வழக்குத் தொடுங்கள்.
சாராய அமைச்சரின் இந்த நடவடிக்கை தமிழக முதலமைச்சரின் வழிகாட்டுதலின் பெயரில் நடக்கிறதா அல்லது சாராய அமைச்சரே தன்னிச்சையாக செயல்படுகிறாரா?” என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil