கருணாநிதியின் மூத்த மகன் அழகிரி நேரடி அரசியலில் இருக்கிறாரோ இல்லையோ; அவரை சுற்றி எப்போதும் அரசியல் பரபரப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. அதுவும் ஜனவரி 30 அவரது பிறந்தநாள் விழா அன்று மதுரையே அமர்க்களப்படுவது வழக்கம்.
இந்த ஆண்டும் அழகிரி பிறந்தநாளை ஒட்டி மதுரையை வாழ்த்து போஸ்டர் மயமாக்கி இருந்தார்கள் அவரது ஆதரவாளர்கள். தவிர ஆங்காங்கே நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து அழகிரியையும் அழைக்க திட்டமிட்டார்கள். இதன் மூலமாக அழகிரியின் பவரை நிலைநாட்டி மீண்டும் கட்சிக்குள் அவருக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்யலாம் என்பது அவர்களது திட்டம்.
இதையும் படியுங்கள்: மருத்துவமனைக்கு நலம் விசாரிக்க வந்த அமைச்சர்… மக்கள் சார்பில் கோரிக்கை வைத்த நல்லகண்ணு
ஆனால் அழகிரி இந்த அன்பு பிடிக்குள் சிக்கவில்லை. அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நேரடியாக சென்று அழகிரியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து ஸ்டாலின் தரப்புக்கும் அழகிரி தரப்புக்கும் சுமூகமான உறவு உருவாகி இருக்கிறது. எனவே இந்த தருணத்தில் விழாக்கள், பிரஸ்மீட் என பரபரப்புகளில் சிக்கி ஸ்டாலினுக்கு தர்ம சங்கடத்தை உருவாக்க அழகிரி விரும்பவில்லை.
எனவே மொத்தமாக மதுரையில் பிறந்தநாள் விழாக்களுக்கு அழகிரி தடை போட்டு விட்டார். அழகிரி ஆதரவாளர்கள் யாரும் பிறந்தநாள் விழாக்களுக்கு ஏற்பாடு செய்யவில்லை. தவிர தனது பிறந்த நாளான ஜனவரி 30 அன்று மதுரையில் இருந்தால் ஆதரவாளர்கள் குவியக் கூடும்; அதனால் தேவையற்ற சர்ச்சைகள் எழலாம் என கருதிய அழகிரி மதுரைக்கு பை பை சொல்லும் முடிவுக்கு வந்தார்.
ஞாயிற்றுக்கிழமை தகவல் படி அழகிரி தனது பிறந்த நாளான திங்கட்கிழமை சென்னைக்கு செல்ல ஆயத்தம் ஆகிவிட்டார். விமானம் மூலமாக சென்றால் மதுரை, சென்னை விமான நிலையங்களில் செய்தியாளர்கள் மைக் நீட்டக் கூடும் என்பதால் மதுரையில் இருந்து சாலை மார்க்கமாகவே சென்னைக்கு வரும் திட்டத்தை வகுத்தார் அழகிரி.
பிறந்தநாள் அன்று கோபாலபுரம் சென்று தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து அழகிரி ஆசி பெற இருப்பதாக தெரிகிறது. இதையொட்டி சென்னையில் உள்ள அழகிரி ஆதரவாளர்களும் கோபாலபுரம் நோக்கி செல்ல ஆயத்தமாகி இருக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.