மு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா?

அழகிரியின் தர்மயுத்தம், வருகிற திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்களில் பாதகமாக வேலை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.

By: Updated: August 23, 2018, 10:18:35 AM

ச.செல்வராஜ்

மு.க.அழகிரி மெரினாவை மையம் கொண்டு அரசியலை முடுக்கி விட ஆரம்பித்திருக்கிறார். ஒருநாள் தர்மயுத்தத்துடன் அழகிரி ஓய்ந்துவிடுவார் என எதிர்பார்த்தவர்களுக்கு செப்டம்பர் 5-ம் தேதி மெரினாவை நோக்கி அவர் ஏற்பாடு செய்திருக்கும் பேரணி ஷாக்!

மு.க.அழகிரி, திமுக.வுக்கு கண்ணி வெடி மாதிரி! வேகமாக அந்தக் கட்சி முன்னேறி வரும் வேளைகளில் திடீரென வெடிப்பார். யாரும் எதிர்பாராத வேளையில், எதிர்பாராத இடத்தில் வெடிப்பது அந்தக் ‘கண்ணிவெடி’யின் ஸ்பெஷாலிட்டி!

‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே!’ டென்ஷன் மு.க.அழகிரி To Read, Click Here

அப்படித்தான் ஆகஸ்ட் 13-ம் தேதி மெரினாவில் கருணாநிதியின் நினைவிடத்தில் நின்றுகொண்டு, தனது சகோதரரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கொந்தளித்தார்.

மு.க.அழகிரியை நுழைக்க பேச்சுவார்த்தை

மு.க.அழகிரி தனது மனைவி காந்தி அழகிரி, மகள் கயல்விழி, மகன் துரை தயாநிதி சகிதமாக மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு செய்தியாளர்களிடம் பேசினார். ‘என்னுடைய ஆதங்கத்தை எனது தந்தையும் தலைவருமான கருணாநிதியிடம் வேண்டிக்கொண்டேன். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. அது, குடும்பம் தொடர்பான ஆதங்கம் இல்லை. கட்சி தொடர்பானது’ என்றார்.

அடுத்து, ‘தமிழகத்தில் கருணாநிதியின் உண்மையான விசுவாசமுள்ள உடன்பிறப்புகள் எல்லோரும் என் பக்கம் தான் உள்ளார்கள்.’ என்றும் அதிரடி கிளப்பினார். கூடுதலாக ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ‘கட்சிக்குள் நான் செல்வதை ஸ்டாலின் விரும்பவில்லை. நான் வலிமையான தலைவராகி விடுவேன் என பார்க்கிறார்கள்’ என்றும் கொளுத்திப் போட்டார்.

அழகிரி பேட்டியில் ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, மு.க.அழகிரியை கட்சிக்குள் நுழைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. ஆனால் மு.க.ஸ்டாலின் அதற்கு பிடி கொடுக்கவில்லை. அந்த ஆதங்கத்தையே மெரினாவில் தனது தந்தையின் நினைவிடத்தில் நின்று போட்டு உடைத்திருக்கிறார் அழகிரி.

மு.க.அழகிரியின் எதிர்பார்ப்புதான் என்ன? ‘திமுக.வில் பழைய மாதிரி தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவி, உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி அறக்கட்டளைகளில் பதவி கொடுத்திருப்பது போல, துரை தயாநிதிக்கும் அறக்கட்டளையில் இடம் ஆகியவைதான் அழகிரியின் டிமாண்ட்’ என்கிறார்கள், விவரமறிந்த மதுரை கட்சிப் பிரமுகர்கள்.

செயற்குழுவில் அழகிரி விவகாரம்!

ஆனால் ஸ்டாலினைப் பொறுத்தவரை, அழகிரியை மீண்டும் உள்ளே நுழைத்து குழப்பத்தை அதிகரிக்க விரும்பவில்லை. இதைத்தான் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளரான ஜெ.அன்பழகன், ‘அழகிரியை நீக்கியது இப்போது இருப்பவர்கள் அல்ல! கலைஞர்!’ என வேறு வார்த்தைகளில் கூறியிருக்கிறார். அழகிரிக்கு கட்சிக்குள் இடமில்லை என்கிற ஸ்டாலினின் எண்ணவோட்டத்தையே ஜெ.அன்பழகன் வெளிப்படுத்துகிறார்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு முதல் செயற்குழு ஆகஸ்ட் 14-ம் தேதி கூடியது. அழகிரியின் மெரினா பேட்டிக்கு எதிராக செயற்குழுவிலும் ஜெ.அன்பழகன் கொந்தளித்தார். அழகிரியை நிரந்தரமாக தொடர்பில் இருந்து தள்ளிவைக்க வேண்டும் என கூறினார் ஜெ.அன்பழகன். ‘அண்ணன் – தம்பி உறவைக்கூட வைக்காதீர்கள்’ என்பதாக இருந்தது ஜெ.அன்பழகன் பேச்சு! மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன், இதில் மத்திய அரசின் சதி இருப்பதாக குறிப்பிட்டார்.

அழகிரியை கைவிட்ட குடும்பம்!

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அழகிரிக்கு ஒரு மனவருத்தம் என்றால், குடும்பத்தில் ஓரிருவர் அதை பக்குவமாக கருணாநிதியிடம் எடுத்துச் சென்று அழகிரி மனதுக்கு மருந்து போடும் வேலையை செய்தார்கள். ஆனால் கருணாநிதி தனது அரசியல் செயல்பாடுகளை நிறுத்திக்கொண்ட கடந்த 2 ஆண்டுகளாகவே அழகிரிக்காக யாரும் பேசத் தயாராக இல்லை. அப்படி பேசினால், கேட்பதற்கும் யாரும் தயாராக இல்லை. இதுதான் அழகிரியின் உச்சகட்ட துரதிருஷ்டம்!

அழகிரி  திடீரென மெரினாவில் எழுப்பிய குரல், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் நிகழ்த்திய தர்மயுத்தத்தை நினைவுபடுத்தவே செய்தது. கருணாநிதி குடும்பத்தில் எப்படி அழகிரிக்காக குரல் எழுப்ப சிலர் நினைத்தாலும் முடியவில்லையோ, அதேபோலத்தான் கட்சியிலும்! எனவே அழகிரிக்கு ஆதரவாக செயற்குழுவில், பொதுக்குழுவில் குரல் எழுகிற பேச்சுக்கே இடமில்லை. அதேசமயம், ஸ்டாலின் அனுமதித்தால் அவரது இதயத்தில் இடம் பிடிப்பதற்காக அழகிரிக்கு எதிராக புயலைக் கிளப்ப பலரும் தயாராக இருக்கிறார்கள்.

இதற்கிடையே அழகிரியின் தர்மயுத்தம் மெரினாவில் ஒரே நாளில் முடிந்துவிடும் என்றே பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் மீண்டும் செப்டம்பர் 5-ம் தேதி அதே மெரினாவில் கருணாநிதியின் நினைவிடம் நோக்கி பேரணி செல்லப் போவதாக அறிவித்து ஷாக் கொடுத்திருக்கிறார் அழகிரி. மவுன ஊர்வலம் என்ற பெயரில் நடந்தாலும், அழகிரியின் ஊர்வல அறிவிப்பு அரசியல் அதிர்வுகளை கிளப்பத் தவறவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் என்று பெரிதாக இல்லை. ஆனால் அந்தந்த மாவட்டங்களில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான குரூப்கள் அழகிரி பக்கம் பாசப் பார்வை வீசுகின்றன. இவர்களை இவ்வளவு நாளும் அணைத்து ஆறுதல் கூறாதது ஸ்டாலின் செய்த தவறு! இந்தக் கூட்டம்தான் இப்போது அழகிரிக்கு பலம்!

திமுக.வின் அமைப்பு ரீதியான 65 மாவட்டங்களில் இருந்து சிறிது சிறிதாக கிளம்பி வந்தாலே சென்னையை திணற வைக்க முடியும் என்ற நோக்கில் அழகிரி அபிமானிகள் தயாராகி வருகிறார்கள். எனவே அழகிரியின் தர்மயுத்தம் மெரினாவை குறி வைத்து தொடர்கிறது.

அழகிரியின் தர்மயுத்தம், வருகிற திருப்பரங்குன்றம்-திருவாரூர் இடைத்தேர்தல்களில் பாதகமாக வேலை செய்யும் வாய்ப்பு இருக்கிறது.  கருணாநிதிக்கு பிந்தைய திமுக.வின் குழப்பத்தின் ஆரம்பமாகவும் இதை பார்க்கிறார்கள் சிலர்! சாண் ஏறினால், முழம் வழுக்குகிறதா திமுக?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Mk alagiri marina beach dmk executive meeting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X