மு.க.அழகிரி செய்தியாளர்கள் சந்திப்பில் திடீர் கோபத்தை வெளிப்படுத்தினார். ஸ்டாலின் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னுட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே!’ என்றார் அவர்!
திமுக தலைவர் கருணாநிதி இறுதி நிகழ்ச்சிகளில் கட்சியை விட்டு ஒதுங்கியிருக்கும் மு.க.அழகிரியும் கலந்து கொண்டார். இதையடுத்து மீண்டும் திமுக.வில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டு பதவி வழங்கப்படலாம் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.
மு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா? To Read, Click Here
ஆனால் அழகிரியை கட்சியில் சேர்க்க மு.க.ஸ்டாலின் விரும்பவில்லை என கூறப்படுகிறது. அழகிரியை கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தவர் கருணாநிதிதான். எனவே அவரது மறைவைத் தொடர்ந்து அழகிரியை சேர்க்க அவசியமில்லை என்கிற கருத்தை மு.க.ஸ்டாலின் தரப்பில் வெளிப்படுத்தி வந்தனர்.
இந்தச் சூழலில்தான் சில தினங்களுக்கு முன்பு மெரினாவில் கருணாநிதி நினைவிடத்தில் பேட்டியளித்த மு.க.அழகிரி, ‘என்னை கட்சியில் சேர்த்தால், வலிமையான தலைவராகிவிடுவேன் என நினைக்கிறார்கள்’ என ஸ்டாலினை மறைமுகமாக தாக்கினார். அத்துடன் தொண்டர்களின் ஆதரவு தனக்கே இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இதை நிரூபிக்கும் விதமாக செப்டம்பர் 5-ம் தேதி மெரினாவில் கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்துகிறார் அழகிரி. இதற்காக தமிழ்நாடு முழுவதும் தனது ஆதரவாளர்களை தயார்படுத்தி வருகிறார் அவர்!
இந்தச் சூழலில் மதுரை விமான நிலையத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) இரவு செய்தியாளர்களை அழகிரி சந்தித்தார். அப்போது அவர், ‘எனது மனக்குமுறல்களை உரிய நேரத்தில் வெளியிடுவேன். செப்டம்பர் 5-ம் தேதி நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.
சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலையில் இருந்து மெரினாவில் தலைவர் நினைவிடம் வரை ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டிருந்தோம். போக்குவரத்து நெரிசலை காரணமாக கூறி, திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகிலிருந்து அனுமதி தருவதாக போலீஸார் கூறியிருக்கிறார்கள்’ என்றார் அழகிரி.
தொடர்ந்து ஒரு நிருபர், ‘மு.க.ஸ்டாலினுக்குத்தான் அதிக நிர்வாகிகள் ஆதரவு இருப்பதாக தெரிகிறதே?’ என்றார். உடனே டென்ஷனான அழகிரி, ‘பேரணி பற்றி கேட்கிறோம்னு சொல்லிட்டு, ஊரணி பற்றி கேட்கிறீங்களே!’ என பேட்டியை முடித்துக்கொண்டு கிளம்பினார்.