மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று திடீர் போராட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘ஆளுனரை எதிர்க்கும் தெம்பு முதல்வருக்கு இல்லை’ என்றார்.
மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, சைதாப்பேட்டையில் இருந்து கிண்டி ஆளுனர் மாளிகை நோக்கி திடீர் ஊர்வலம் நடத்தினார். நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஆளுனர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கருப்புக் கொடி காட்டிய திமுக.வினர் 192 பேர் சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து இந்தப் போராட்டம் நடந்தது.
மு.க.ஸ்டாலின் போராட்டம் live updates
மு.க.ஸ்டாலின் உள்பட போராடிய திமுக.வினர் அனைவரையும் போலீஸார் கைது செய்தனர். அங்கு செய்தியாளர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது: ‘கருப்புக்கொடி காட்டுவது ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட முறை. பண்டித ஜவகர்லால் நேரு, மூதறிஞர் ராஜாஜி, அம்மையார் இந்திரா காந்தி, அண்மையில் பிரதமர் மோடி ஆகியோருக்கு கருப்புக் கொடி காட்டியிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் ஊர்வலமாக சென்றபோது...
மோடி இதற்கு அச்சப்பட்டு சாலை வழியாக வராமல், ஆகாயத்தில் பறந்து போன கதை உங்களுக்கு தெரியும். மோடிக்கு கருப்புக் கொடி காட்டியபோதுகூட திமுக.வினர் கைது செய்யப்பட வில்லை.
இப்போது ஆளுனர் உத்தரவுப்படி கைது நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள். எனவேதான் ஆளுனர் நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் இந்தப் பேரணியை நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறோம்.
மு.க.ஸ்டாலின் கைதானபோது...
தொடர்ந்து இதுபோல் செயல்படுவார் என்றால், ஆளுனர் இந்தப் பதவியில் நீடிக்க லாயக்கற்றவர் என்ற நிலையில் ராஜினாமா செய்ய கோருகிறோம். ஆளும் கட்சியினர் பாஜக காலடியில் கிடப்பதால், ஆளுனரை முதல் அமைச்சரோ, அவருக்கு கீழ் இருக்கும் அமைச்சர்களோ எதிர்த்தால் ஊழல் வழக்குகளில் சிறை செல்ல வேண்டியிருக்கும் என்பதால் மாநில சுயாட்சியில் ஆளுனர் தலையிடுவதை கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆளுனரை எதிர்க்க தெம்பு, திராணி இல்லை’ என்றார் மு.க.ஸ்டாலின்.
மு.க.ஸ்டாலின் அறிக்கை
மு.க.ஸ்டாலின் முன்னதாக வெளியிட்ட அறிக்கை வருமாறு: ‘நாமக்கல் மாவட்டத்திற்கு ஆய்வு நடத்த வந்த மாண்புமிகு ஆளுநருக்கு ஜனநாயக ரீதியாக கருப்புக் கொடி காட்டிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை கைது செய்து ரிமான்ட் செய்வதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தபோது...
ஆரோக்கியமான ஜனநாயகத்தில் அரசியல் சட்ட அமைப்பின்படி செயல்படுவதுதான் ஒரு மாநிலத்தின் பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் மாண்புமிகு ஆளுநருக்கு அழகு. ஆனால், கருத்து சுதந்திரத்தையும், அறவழிப் போராட்டங்களையும் அடக்கி ஒடுக்குவதற்கு மாநில அரசுக்கு உத்தரவிடுவது மாண்புமிகு ஆளுநருக்கு எவ்விதத்திலும் மதிப்பளிக்காது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
மத்திய அரசோ அல்லது மாண்புமிகு ஆளுநரோ விரும்பினால் மைனாரிட்டி அதிமுக ஆட்சியை மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடலாம். அப்படியில்லையென்றால் மாநில நிர்வாகமும், இங்குள்ள அதிமுக ஆட்சியும் எங்கள் சொல்படிதான் நடக்கிறது என்று வெளிப்படையாக அறிவிக்கலாம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை மிசா போன்ற நெருக்கடிகளையே சந்தித்த இயக்கம். இது போன்ற மிரட்டல்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், அடக்குமுறைகளுக்கும் அஞ்சாது.
மு.க.ஸ்டாலின் போராட்டம்-கைது எதிரொலியாக சென்னை சைதாப்பேட்டையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
திரைமறைவில் இருந்து கொண்டு அதிமுக ஆட்சியை ஆட்டுவித்து, பா.ஜ.க. வினரை விமர்சனம் செய்வோரை கைது செய்ய, மாண்புமிகு ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டினால் கைது செய் என்றெல்லாம் மறைமுக உத்தரவுகளை பிறப்பிப்பது ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு துளியும் பொருந்தாது என்பதை மத்திய அரசும், மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் தமிழக ஆளுநரும் உணர வேண்டும்.
அரசியல் சட்டத்தின் கண்ணியத்தைக் காப்பாற்ற வேண்டிய மாண்புமிகு ஆளுநர் அச்சட்டத்தின் கட்டளைகளை மதித்து செயல்பட வேண்டுமே தவிர, பா.ஜ.க.வின் பிரதிநிதியாக செயல்படுவது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்திற்கோ அல்லது ஜனநாயகத்திற்கோ துளியும் ஏற்ற செயல் அல்ல.
ஆகவே, மாநில சுயாட்சிக் கொள்கையை வலியுறுத்தும் திராவிட முன்னேற்றக் கழகம் இது போன்ற கைதுகளுக்கு எல்லாம் அஞ்சி போராட்டத்தை கைவிடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.’ இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார்.