பரியேறும் பெருமாள் படம் ரிலீஸாகி ஒரு வாரம் கடந்த நிலையில் மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வரிசையாக பாராட்டு ட்வீட்களால் திணறடித்தனர்.
பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் படம், பரியேறும் பெருமாள்! செப்டம்பர் 27-ம் தேதி ரிலீஸான இந்தப் படத்திற்கு அன்றே பாசிட்டிவான ரிவ்வியூ வரத் தொடங்கியது.
Read More: சமூக அழுக்கை அகற்ற பரியன்கள் தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும் - முக ஸ்டாலின்
பரியேறும் பெருமாள் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியலை சொல்லும் படம் என்ற வகையிலும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கான படம் என்ற வகையிலும் பல்வேறு தளங்களிலும் பாராட்டுகள் குவிந்தபடியே இருக்கின்றன.
‘பரியேறும் பெருமாள்’ பார்த்தேன். இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்தியது இந்தப் படம். @beemji தயாரிப்பில் அறிமுக இயக்குநரான @mari_selvaraj படத்தை மறக்க முடியாது. சமூக அழுக்கை அகற்ற இன்னும் பல ‘பரியன்கள்’ தமிழ் சமூகத்திற்கு வர வேண்டும்! pic.twitter.com/DQb7MpFhGZ
— M.K.Stalin (@mkstalin) 6 October 2018
பரியேறும் பெருமாள் ரிலீஸாகி இன்று (அக்டோபர் 6) 9-வது நாள்! இந்தச் சூழலில் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், அவரது நண்பர் மகேஷ் பொய்யாமொழி, அவரைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின் என அடுத்தடுத்து ஒரே நாளில் பரியேறும் பெருமாளை பாராட்டி ட்வீட்களை வெளியிட்டனர்.
மு.க.ஸ்டாலின் எல்லாப் படங்களையும் பார்ப்பதில்லை என்ற அடிப்படையில் அவர் தாமதமாக பார்த்து, பாராட்டுச் சான்றிதழ் கொடுப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சினிமாத் துறையில் இருக்கும் உதயநிதி, எம்.எல்.ஏ.வாக இருந்தாலும் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் பதவியையும் தக்க வைத்திருக்கும் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் அடுத்தடுத்து ட்வீட்களால் பாராட்டியிருப்பது இயல்பானதுதானா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல, தமிழ் சமுதாயத்திற்கே நம்பிக்கைமிகுந்த படைப்பு “பரியேறும் பெருமாள்”! ????
கருப்பியும், பரியனும் படம் முடிந்து வெளிவந்த பிறகும் மனதில் நிற்கிறார்கள்!
இயக்குநர் @mari_selvaraj மற்றும் தயாரித்த @beemji அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்! ???????? pic.twitter.com/ChH5kCOI1l
— Anbil Mahesh (@Anbil_Mahesh) 6 October 2018
அண்மையில் குறிப்பிட்ட சமூகங்களை ஆட்சேபனைக்குரிய வகையில் விமர்சித்த கருணாஸ் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார். அதை ‘தேவையற்ற கைது’ என்கிற விதமாக ஸ்டாலின் குறிப்பிட்டார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கருணாஸை சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகனை அனுப்பி நலம் விசாரித்தார்.
இது விடுதலை சிறுத்தைகள் மத்தியில் கடுமையான கோபத்தை உருவாக்கியது. குறிப்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு தனது முகநூல் பக்கத்தில், ‘கருணாஸ் - திமுக அன்பழகன் சந்திப்பு: கருணாசின் சட்டவிரோத செயல்பாடுகளை திமுக ஆதரிக்கிறதா?’ என்ற தலைப்பில் பின்வருமாறு எழுதியிருந்தார்.
‘நடிகரும் எம்எல்ஏவுமான கருணாசின் பேச்சாக இருக்கட்டும். அதன் பிறகு சன் நியூசில் ராஜாதிருவேங்கடத்துக்கு அளித்த பேட்டியாக இருக்கட்டும். எல்லாமே சாதிவெறியை ஞாயப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. அது மட்டுமல்லாது குடிக்கிறது தப்பு இல்லை என்றும் குடிக்கிறதுக்காக தினமும் 1 லட்சம் செலவு பண்ணுவதாகவும் பெருமையோடு
சொல்லுகிறார்.
இரட்டை குவளையால் ஊர் என்றும் சேரி என்றும் பிரித்த நிலத்தில் , அதே இரட்டை குவளையால் ஊரையும் சேரியையும் இணைத்து விட்டான் "பரியேரும் பெருமாள் " வாழ்த்துகள் @beemji @mari_selvaraj pic.twitter.com/Plv7ULwFQE
— Udhay (@Udhaystalin) 5 October 2018
வன்முறையை தூண்டும் வகையில் “வெட்டுவேன் குத்துவேன்” என்று கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் பேசுகிறார். அப்படிப்பட்ட பேர்வழியை திமுக சார்பில் ஜெ.அன்பழகன் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு நல்ல அணுகுமுறையல்ல.
ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அரசியல் சட்ட அமைப்புக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். ஆனால் கருணாசின் பேச்சும் பேட்டியும் அருவருக்கதக்கதாகும். திமுக சார்பில் கருணாசை சந்தித்ததன் மூலம் கருணாசின் பேச்சை ஆதரிக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.
சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பறிக்க கூடாது என்று அன்பழகன் பேட்டி வேறு கொடுத்துள்ளார். கருணாசின் இந்த பேச்சுக்காகவே அவரின் பதவியை பறித்திருக்க வேண்டும். திமுக இதற்காகத்தான் குரல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால் திமுகவின் செயல்பாடு நம்பிக்கை இழக்கிறது. இது குறித்து திமுக விளக்குமா?’ என கேட்டிருந்தார்.
இது போன்ற விமர்சனங்களை மட்டுப்படுத்தும் விதமாகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவான குரலை திமுக ஆதரிக்கும் என உணர்த்தும் விதமாகவும் இப்படி ஒரே நாளில் உதயநிதி, மகேஷ் பொய்யாமொழி, மு.க.ஸ்டாலின் ஆகியோர் அடுத்தடுத்து ‘ட்வீட்’டியதாக கூறப்படுகிறது.
இதில் இன்னொரு அரசியலும் இருக்கிறது. இன்றைய தேதியில் திருமாவளவன் திமுக கூட்டணியில்தான் இருக்கிறார். ஆனால் அமைச்சர் ஜெயகுமார் ஒரு பேட்டியில், ‘திருமாவளவன் எங்களை நெருங்கி வருகிறார். வாழ்த்துகள்’ என கூறியதற்கு திருமா நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை. இதில் திருமா மீது திமுக.வுக்கு கோபம் இருக்கிறது.
தவிர, திருமாவை அணியில் வைத்திருந்தால் வட மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் குறிப்பிட்ட இரு சமுதாயங்களின் வாக்குகளை இழக்க நேரிடும் என திமுக மாவட்ட நிர்வாகிகள் சிலர் ஸ்டாலினிடம் கூறி வருகிறார்கள்.
திருமா அளவுக்கு இல்லாவிட்டாலும், பா.இரஞ்சித்தும் ஒடுக்கப்பட்ட சமூக இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருக்கிறார். குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ் மேவானி மூலமாக அண்மையில் ராகுல் காந்தியையும் சந்தித்து திரும்பினார் இரஞ்சித். எனவே காங்கிரஸ்-திமுக கூட்டணியில் பா.இரஞ்சித்துக்கு ஒரு மக்களவை தொகுதியை ஒதுக்கிக் கொடுத்து திருமாவை கழற்றி விடும் திட்டமும் திமுக.வில் இருப்பதாக கூறுகிறார்கள்.
ஒரு வாரம் கடந்த நிலையில் பரியன் மீது திமுக.வுக்கு உருவான திடீர் பாசத்திற்கு இத்தனை பின்னணியா?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.