Advertisment

நாங்குநேரி சாதி வன்முறை எதிரொலி; கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு

நாங்குநேரி சம்பவம் எதிரொலி; சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து ஸ்டாலின் உத்தரவு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
mk stalin

மு.க.ஸ்டாலின்

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கிட மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Advertisment

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி, பெருந்தெருவைச் சேர்ந்த கூலி தொழிலாளிகளான முனியாண்டி, அம்பிகாபதி தம்பதியரின் 17 வயது மகனும், 14 வயது மகளும் வள்ளியூரிலுள்ள பள்ளியில் படிக்கிறார்கள். இப்பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கடந்த சில வாரங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்களது மகன் கடந்த ஒரு வாரமாக பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், பள்ளி நிர்வாகம் பெற்றோரை தொடர்பு கொண்டு மகனை பள்ளிக்கு அனுப்புமாறு தெரிவித்துள்ளனர். பிறகு, பள்ளிக்கு வந்த மாணவரிடம் ஆசிரியர்கள் விசாரித்துள்ளனர். அப்போது பள்ளியில் சில மாணவர்கள் தன்னை தாக்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: ‘நஞ்சை இளம்பிஞ்சுகளின் நெஞ்சில் விதைக்கும் சாதிவெறிபிடித்த அமைப்புகள்’: நாங்குநேரி சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம்!

இந்நிலையில், நாங்குநேரியிலுள்ள வீட்டில் மாணவரும், அவரது தங்கையும் இருந்தபோது இரவு 10.30 மணியளவில் 3 பேர் கும்பல் வீட்டுக்குள் அத்துமீறி புகுந்து அண்ணனையும், தங்கையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. படுகாயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு நாங்குநேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், இந்த தாக்குதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 17 வயதுடைய பிளஸ்-2 மாணவர்கள் 4 பேர் மற்றும் 3 சிறார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவும் பிரச்சினையில் அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை வழங்க குழு அமைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, “சில நாட்களுக்கு முன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினர், சக மாணவர்களால் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக மக்களை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சாதி, மத, பேதங்களைக் கடந்து மனிதநேயத்துடன் ஒரு சமுதாயத்தைப் படைத்து, அனைத்துத் தரப்பு மக்களும் சமூகப் பொருளாதார வளர்ச்சி பெற வேண்டுமென்று இந்த அரசு செயலாற்றி வருவதை மக்கள் அறிவார்கள்.

இச்சூழ்நிலையில், ஒரு சம்பவம் என்னை மிகுந்த வேதனைக்குள்ளாக்கியுள்ளது. எதிர்கால சமுதாயம் சாதி, மதம் போன்ற பிற்போக்குச் சிந்தனைகள், சகோதர உணர்வுடன் வாழ்ந்திட வேண்டும்; புதிய தமிழ்நாடு படைத்திட வேண்டும் என்றெல்லாம் எண்ணி கல்வி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்புப் பெருக்கம் போன்ற மக்கள் நலன் சார்ந்த திட்டங்களில் கழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

இந்நிலையில், நாங்குநேரி சம்பவம் மூலம் சாதி, இனப் பிரச்சினைகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களில் சில பகுதியினர் தேவையற்ற வகையில் ஈடுபட்டு வருகின்றனர் என்ற கசப்பான உண்மை நமக்குத் தெரிய வருகிறது. இந்தச் சம்பவம் பற்றிக் கேள்வி எழுப்பப்பட்டவுடன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பாதிக்கப்பட்ட மாணவர் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்து, ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தேன். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அம்மாணவனின் உயர் கல்விச் செலவு முழுவதையும் அவரே ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார்.

இளைய சமுதாயத்தினரிடையே சாதி, இன உணர்வு பரவியிருப்பது எதிர்காலத் தமிழகத்தின் நலனுக்கு உகந்ததல்ல. இது உடனடியாக சரி செய்யப்பட வேண்டிய ஒரு முக்கியமான பிரச்சினை என்பதால், இதில், அரசு எந்த வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பது குறித்தும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இனப் பிரிவினைகள் இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், அரசுக்கு ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்திட உத்தரவிட்டுள்ளேன்.

இந்தக் குழு, மேற்படி பொருள் தொடர்பாக கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சமூக சிந்தனையாளர்கள், பத்திரிகைத் துறையினர் என பல்வேறு தரப்பினரின் கருத்துகளைப் பெற்று அதனடிப்படையில் அரசுக்கு விரைவில் அறிக்கை சமர்ப்பித்துவிடும்.” இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stalin Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment