தனிமனிதரை விட கழகம் தான் பெரிது. கொண்ட கொள்கை தான் பெரிது. இதனை நெஞ்சிலேந்தி செயல்படுங்கள். அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது. தமிழ்நாட்டை இனி தி.மு.க தான் ஆளப்போகிறது என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தற்போது தி.மு.க.வில் 15-வது உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. முதற்கட்டமாக பேரூராட்சி, ஒன்றியம், நகரம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரம் வரை தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மாவட்ட செயலாளர்கள், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
இதையும் படியுங்கள்: ஸ்டாலின் மீண்டும் தி.மு.க தலைவராக தேர்வு: கனிமொழிக்கு துணைப் பொதுச் செயலாளர் பதவி
தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கை குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் பொதுக்குழுவில் நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை அமைந்தகரை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க பொதுக்குழு இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் தமிழகம் முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2,600 பொதுக்குழு உறுப்பினர்களும், 1,500 சிறப்பு அழைப்பாளர்களும் என மொத்தம் 4,100 பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் தி.மு.க கட்சி தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.மு.க பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
பின்னர் பொதுக்குழுவில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் உரையாற்றியதாவது...,
இரண்டாவது முறையாக தி.மு.க-வின் தலைவராக பொறுப்பேற்று இருக்கிறேன். அதற்கான வாய்ப்பு வழங்கிய உங்களை அனைவரையும் வணங்குகிறேன். கழகமே தங்கள் மூச்சும் பேச்சுமாக வாழும் கழக உடன்பிறப்புகளுக்கு, என்றென்றும் உண்மையாக இருப்பேன் என உறுதிமொழி அளிக்கிறேன். கழகத்தின் உறுப்பினர் அட்டை வைத்திருக்கும் ஒவ்வொரு உறுப்பினரும் மதிப்பிற்குரியவர்கள். மரியாதைக்குரியவர்கள்.
கொள்கை பலமும் அதை அடைவதற்கான தொண்டர்களும் நமது கழகத்தில் இருப்பதினால் தான், கட்சி தொடங்கிய போது இருந்த அதே சுறுசுறுப்போடு எழுபது ஆண்டுகளைத் தொடர்ந்து இன்று வரை இயங்கிக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணாவிற்கு பிறகு, கலைஞருக்கு பிறகு இந்த கட்சியின் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. இந்த பொறுப்பை நான் நம்பி அல்ல உங்களை நம்பித்தான் ஏற்றிருக்கிறேன். அன்றிலிருந்து இன்று வரை நமக்கு ஏறுமுகம் தான்.
கிராமப்புற ஊராட்சி தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலில், சட்டமன்ற தேர்தலில் வெற்றி, என இந்த மூன்று ஆண்டுகள் திராவிட கழகத்தின் முன்னேற்றக் காலம் என இன்று வரை நிரூபித்து வருகிறோம். மூன்று ஆண்டுகளாக முறைப்படி கழகத்தின் தேர்தலை நடத்தியுள்ளோம். கழகத்தின் பல பொறுப்புகளுக்கு போட்டி இருந்தது உண்மைதான். அது பதவிக்காக அல்ல, மக்களுக்காக உழைப்பதற்கு போட்டி போடுகிறார்கள் என்ற வகையில் எனக்கு பெருமையாக இருந்தது. 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தி.மு.க கட்சிப் பதவிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
தி.மு.க பழுத்த மரம் என்பதால் தான் கல் எரிகிறார்கள். கழகம் மரம் மட்டுமல்ல கல் கோட்டை. தி.மு.க உறுப்பினர்கள் பலர் புதிய பொறுப்புகளுக்கு வந்துள்ளனர். நான் தகுதியானவன் என்பதால் இந்த பொறுப்புக்கு வந்துவிட்டேன் என யாரும் எண்ண வேண்டாம். காலம் உங்களுக்கு பணி செய்வதற்கு ஒரு கொடை வழங்கியிருக்கிறது.
நம்மைப் போன்ற லட்சக்கணக்கான தொண்டர்கள் நமக்கு தோளோடு தோள் சேர்ந்து களப்பணியாற்ற காத்திருக்கிறார்கள். எனவே நமது பொறுப்பை, கடமை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்த பொறுப்பை நீங்கள் எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் பொறுப்புகள் தொடரும் என்பதை மறந்து விட வேண்டாம். சொந்த விருப்பு வெறுப்போடு செயல்படுவது கட்சி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும்.
தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். தொடர்ச்சியாக பல கூட்டங்களை தி.மு.க நிர்வாகிகள் நடத்த வேண்டும். மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பதே மிக முக்கியமான கடமையாகும். தனிமனிதரை விட கழகம் தான் பெரிது. கொண்ட கொள்கை தான் பெரிது. இதனை நெஞ்சிலேந்தி செயல்படுங்கள்.
அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டிய காலம் இது, சட்டமன்றத் தேர்தலில் வென்றுவிட்டோம், ஆட்சிப் பொறுப்புக்கு வந்துவிட்டோம் என மெத்தனமாக இருக்க முடியாது. பெற்ற வெற்றியை தக்கவைக்க வேண்டும். இனி தி.மு.க தான் தமிழ்நாட்டை நிரந்தரமாக அழப்போகிறது என்பதில் துளியும் சந்தேகமில்லை. நம்மை விட நாட்டு மக்கள் அதில் உறுதியாக இருக்கிறார்கள்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு இருந்ததை விட தி.மு.க.,வின் செல்வாக்கு பொதுமக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இதுதான் எனக்கு பயத்தை கொடுக்கிறது. கழகத்தின் செல்வாக்கும், என் மீதான நம்பிக்கையும் மக்களிடையே உயரும், இந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்பதுதான் என் சிந்தனையாக இருக்கிறது.
சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதியிருப்பார். எது வந்தாலும் பொறுப்பேற்க வேண்டியன் மன்னன் தான். எனவே பதவியில் துன்பமே தவிர இன்பம் இல்லை என்கிறார் இளங்கோவடிகள். மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். மழை அதிகமாக பெய்து வெள்ளம் வந்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களில் இருந்தும் வரக்கூடிய பன்முனை தாக்குதல்களுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒருபக்கம் தி.மு.க தலைவர், இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர். மத்தளத்திற்கு இரண்டு பக்கமும் அடி என்பது போல் இருக்கிறது என் நிலைமை.
இதுபோன்ற சூழ்நிலையில் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல் மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் உருவாக்கினால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது? நாள்தோறும், காலையில் கண் விழிக்கும்போதே நம்மவர்கள் யாரும் புது பிரச்சனையை உருவாக்கி இருக்கக்கூடாது என்ற நினைப்போடுதான் நான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்க விடாமல் கூட ஆக்கி விடுகிறது. ஒரு சொல் வெல்லும். ஒரு சொல் கொல்லும். எனவே, தி.மு.க.,வினர் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
தி.மு.க.,வில் வாய்ப்பை பெற முடியாதவர்கள் வருத்தப்பட வேண்டாம். உட்கட்சி தேர்தலில் மோதல் வெடிக்கும் என எழுதலாம் என்று நினைத்த பாரம்பரிய பத்திரிக்கைகளின் ஆசையில் மண் விழுந்தது. திமுகவினர் பேசியதை வெட்டியும் ஒட்டியும் பரப்புவார்கள். மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளை கைப்பற்றி தேசிய அரசியலில் முக்கிய சக்தியாக தி.மு.க உருவெடுக்க வேண்டும்.
மக்களவை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க எதையும் செய்ய தயாராக உள்ளது. அ.தி.மு.க கோஷ்டி பூசலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குளிர்காய பார்க்கும் அக்கட்சியானது மதம், ஆன்மிகத்தை தூண்டிவிட்டு பதவியை பிடிக்கிறது.
தி.மு.க.,வை எதிர்ப்பதை தவிர அ.தி.மு.க.,வுக்கு வேறு எந்த கொள்கையும் இல்லை. அ.தி.மு.க 4 பிரிவுகளாக பிரிந்தும், சரிந்தும், சிதைந்தும் கிடக்கிறது. எதிர்கட்சிகளுக்கு எந்த பெருமையும் இல்லாததால் நம்மை அவமதிக்க பார்ப்பார்கள். தி.மு.க நிர்வாகிகளின் செயல்பாடுகள் கட்சிக்கும் அவர்களுக்கும் பெருமை தரக்கூடியவையாக இருக்க வேண்டும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.