ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு 9 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சை அளிக்கும் என்றும், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருக்க 42 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க உள்ளோம் என்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த மாதம் பரிசோதனைக்காகச் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணை சோதித்த அரசு மருத்துவர்கள், அவருக்கு ரத்தக் குறைபாடு உள்ளதாக கண்டறிந்தனர். அவருக்கு ரத்தம் ஏற்றுவதற்காக சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கியில் இருந்து ரத்தத்தை பெற்று அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.
சில நாட்கள் கழித்து அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால், மீண்டும் மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது, அந்தப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவருக்கு கடந்த மாதம் செலுத்திய ரத்தத்தில் ஹெச்.ஐ.வி கிருமி இருந்தது தெரியவந்தது.
சிவகாசியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் இருக்கும் ரத்த வங்கியில் ரத்த தானம் வழங்கியதும், அவரது ரத்தத்தைப் பரிசோதிக்காமல் அதை சேமித்து வைத்து கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஏற்றியதும் தெரியவந்தது.
யாரிடம் இருந்து ரத்தம் தானமாக பெற்றாலும், அதனை குறைந்தபட்சம் ஹெச்.ஐ.வி. ஹெபடிடிஸ் B, ஹெபடிடிஸ் c, சிபிலிஸ், மலேரியா ஆகிய ஐந்து சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, ரத்தத்தை வழங்கியவருக்கும் கவுன்சலிங் கொடுக்க வேண்டும். ஆனால், அரசு ஒப்பந்தம் பெற்று ரத்த வங்கி நடத்தி வந்த அந்த தனியார் நிறுவனம், ரத்தத்தில் ஹெச்.ஐ.வி. கிருமி இருக்கிறது என்பதை ரமேஷிடம் தெரிவிக்காமல் அவரையும் எச்சரிக்காமல் இருந்திருக்கின்றனர்.
இந்தநிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கும் அந்த ரத்தத்தை செலுத்த, அவரது குடும்பமுமே இப்போது இடிந்து போயிருக்கிறது.
விசாரணையின் முடிவில், லேப் டெக்னீஷியன், ஆலோசகர், மெடிக்கல் அதிகாரி என மூன்று பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டு பின்பு பணியில் இருந்து நீக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட கர்ப்பிணி, அலட்சியமாக செயல்பட்ட அரசு மருத்துவமனை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாத்தூர் டவுன் காவல்நிலையத்தில் குடும்பத்துடன் சென்று புகார் அளித்திருக்கிறார்.
விருதுநகர் விரைந்த சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கர்ப்பிணிப் பெண் அவரது கணவர் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரிடமும் விசாரணை நடத்தினார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராதா கிருஷ்ணன், "ஹெச்.ஐ.வி. தொற்று இருப்பதை உறுதி செய்ய ரத்தம் வழங்கியவருக்கும், அப்பெண்ணுக்கும் அட்வான்ஸ் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அங்கு அவருக்கு உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஜனவரி 30ம் தேதி அப்பெண்ணுக்கு குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெச்.ஐ.வி. தொற்று இல்லாமல் அக்குழந்தையை பிறக்க வைப்பதே எங்களது முதற்கட்ட பணியாகும். இதற்காக சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.
இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இவ்விவகாரத்தை கண்டித்து ட்வீட் செய்துள்ளார். அவர் தனது ட்விட்டரில், "இந்த ஊழல் அரசின் கீழ் அரசு மருத்துவமனைகள் எந்த லட்சணத்தில் விளங்குகிறது என்பதற்கு இதைவிட உதாரணம் வேண்டுமா என்ன?
உடனடியாக அனைத்து அரசு மருத்துவமனை இரத்தங்களும் பரிசோதனை செய்யப்பட வேண்டும்!
குட்கா விஜயபாஸ்கர் இனியாவது மக்கள் நல்வாழ்வுதுறை பணிகளில் ஈடுபடுவாரா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் படிக்க - சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி.: ரத்தம் கொடுத்த இளைஞர் தற்கொலைக்கு முயற்சி, ரத்த வங்கி ஊழியர்கள் டிஸ்மிஸ்
இந்தச் சூழ்நிலையில், கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஜனவரி 3ம் தேதி தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஹெச்.ஐ.வி. ரத்தம் செலுத்தப்பட்ட பெண்ணுக்கு 9 பேர் கொண்ட மருத்துவக் குழு சிகிச்சை அளிக்கும் என்றும், குழந்தைக்கு ஹெச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் இருக்க 42 நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்க உள்ளோம் என்றும் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை டீன் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.