பிரியாணி கடையில் ஸ்டாலின்: சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.ஆர்.அன்பு பிரியாணி கடையில், கடந்த 28ம் தேதி இரவு தி.மு.க. பிரமுகர்கள் யுவராஜ், திவாகர் உள்ளிட்ட 11 பேர் கும்பலாக சென்று பிரியாணி கேட்டனர். அப்போது கடை உரிமையாளரான பிரகாஷ், பிரியாணி தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த யுவராஜ், கடையில் உள்ள பொருட்களை தூக்கி வீசி, உரிமையாளரான பிரகாசின் முகத்தில் சரமாரியாக குத்து விட்டார். அடிப்படையில் பாக்ஸரான யுவராஜ், தனது பாக்ஸிங் திறமைகளை கடை உரிமையாளரிடம் காண்பித்தார். அவருடன் வந்தவர்களும் சரமாரியாக தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதில் பிரகாஷ், கடை ஊழியர்களான கருணாநிதி, நாகராஜ் ஆகிய 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்யப்பட்டது. வடபழனி உதவி கமிஷனர் சங்கர், இன்ஸ்பெக்டர் ராஜூ பிரின்ஸ் ஆரோன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து யுவராஜும் அவரது நண்பர் திவாகரும் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டனர். இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் கட்சியினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்தார்.
இந்த நிலையில், ஸ்டாலின் இன்று காலை விருகம்பாக்கத்தில் உள்ள பிரியாணி கடைக்கு நேரில் சென்றார். கடை உரிமையாளரை சந்தித்து நடந்த விவரங்கள் பற்றி கேட்டறிந்த ஸ்டாலின், தாக்குதலில் காயம் அடைந்த ஊழியர்களின் விவரம் குறித்து கேட்டறிந்து, அவர்களுக்கு ஆறுதல் கூறினார். ஸ்டாலினுடன் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.
இந்த நிலையில், பிரியாணி கடை தாக்குதல் தொடர்பாக சுரேஷ் மற்றும் ராம்கிஷோர், கிஷோர், கார்த்திக், மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சுரேஷ் கல்லூரி மாணவர் ஆவார். மாங்காட்டில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.சி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
யுவராஜ், திவாகர் உள்ளிட்ட மேலும் சிலர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை
பிரியாணி கடை ஊழியர்களுக்கு ஆறுதல் கூறியபிறகு ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவு: ‘விருகம்பாக்கத்தில் தாக்குதல் சம்பவம் நடைபெற்ற கடைக்குச் சென்று, ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். இதுபோன்ற கண்டிக்கத்தக்க செயல்களில் ஈடுபடுவோருக்கு கழகத்தில் எக்காரணம் கொண்டும் இடமில்லை என்பதை தெளிவுபடுத்தினேன்.
தி.மு.கழகத்திற்கு அவப்பெயரை உருவாக்கும் விதத்திலும், லட்சக்கணக்கான தொண்டர்களின் உழைப்பை வீணாக்கும் வகையிலும் செயல்படும் யாராக இருந்தாலும், அவர்கள் மீது தயவு தாட்சண்யமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டேன்!’ இவ்வாறு கூறியிருக்கிறார்.
வீடியோ: பிரியாணி கடை ஊழியர்களை தாக்கிய யுவராஜ்