திமுக தலைவர் ஸ்டாலினுடன் டெலிபோனில் பேசிய பிரதமர் மோடி, அமித்ஷா இருவரும் ஸ்டாலின், அவரது குடும்பத்தினர் உடல் நலம், தயாளு அம்மாளின் உடல் நலன் குறித்து விசாரித்தனர். அவர்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திராவிட கட்சிகள் இரண்டும் அரசியலுக்கு அப்பாற்பட்ட தனிப்பட்ட விதத்தில் தலைவர்கள் முறையில் கூட நெருக்கம் காட்டாதவை. மறந்தும் உடல்நலத்தை கூட விசாரித்துக் கொள்ள மாட்டார்கள். இந்த கட்சியில் இருப்பவர், அந்த கட்சியில் இருப்பவரின் இல்ல திருமணத்திற்கு கூட செல்ல முடியாது. ஆனால், தேசிய அரசியல் அப்படி இருப்பதல்ல. ராகுல் பிறந்தநாளுக்கு மோடி வாழ்த்து தெரிவிப்பார். மோடிக்கு ராகுல் வாழ்த்து தெரிவிப்பார். சோனியாவுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிப்பார்.
சர்ச்சை பாதி; பாராட்டு மீதி: யார் இந்த பீலா ராஜேஷ் ஐஏஎஸ்?
பிரதமர் மோடி இந்த நடைமுறையை தமிழக அரசியல்வாதிகளிடமும் கடைபிடித்து வருகிறார். தமிழக முன்னாள் முதல்வர், திமுக தலைவர் மறைந்த கருணாநிதியின் உடல் நலனை விசாரிக்க கோபாலபுரம் இல்லம் தேடி வந்துச் சென்றார். அவ்வப்போது திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசி வருகிறார்.
இந்நிலையில் திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், இன்று காலை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசினார். திமுக தலைவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் உடல்நலம் குறித்து முதலில் விசாரித்தார். தயாளு அம்மையாரின் உடல்நலம் குறித்தும் விசாரித்தார். அப்போது பிரதமரின் உடல்நலன் குறித்து திமுக தலைவரும் கேட்டறிந்தார்.
ஏப்ரல் 8ம் தேதி நடைபெறும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்துக்கு திமுகவுக்கு அழைப்பு வந்துள்ளது என்றும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தகவல் தந்துள்ளார் என்றும், நாடாளுமன்ற திமுக குழுத்தலைவர் டி ஆர் பாலு கலந்து கொள்வார் என்றும் திமுக தலைவர் அப்போது தெரிவித்தார்.
நாட்டின் சுகாதார நிலைமை சீரடைய ஆக்கபூர்வமான ஆலோசனைகளை மத்திய அரசுக்கு வழங்குவோம் என்று திமுக தலைவர் கூறினார்.
மத்திய அரசு ஒவ்வொரு இந்திய மக்களின் வாழ்க்கைக்கும் அரணாக இருக்க வேண்டும்' என்று பிரதமரிடம் திமுக தலைவர் கேட்டுக் கொண்டார். 'மத்திய அரசு கவனமாகச் செயல்பட்டு வருகிறது' என்று பிரதமரும் உறுதி அளித்தார்.
இதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், திமுக தலைவரைத் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்" என்று திமுக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.