சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், “30, 40 வருடங்களாக ரசிகர் மன்றத்தில் இருந்தது மட்டுமே மக்கள் மன்றத்தில் பதவி பெறுவதற்கோ, அரசியலில் ஈடுபடுவதற்கோ முழு தகுதி ஆகிவிட முடியாது.
முதலில் உங்கள் குடும்பத்தை கவனியுங்கள். அரசியல் எல்லாம் அப்புறம் தான். கட்சிக்காக செலவு செய்யுங்கள் என்று யாரிடமும் நான் சொன்னதில்லை. அதனால் யாராவது என்னிடம் வந்து நான் மன்றத்திற்காக செலவு செய்தேன் என்று சொன்னால் அதை நான் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று தெரிவித்தார்.
ரஜினியின் முழு அறிக்கை
ரஜினியின் இந்த அறிக்கை, அவரது ரசிகர்களிடையே சிறிது சலசலப்பை ஏற்படுத்தியது. இவ்வளவு காலம் ரசிகர் மன்றத்திற்காக உழைத்து, செலவு செய்தால், பதவி கிடையாது என தலைவர் சொல்கிறாரே என சில ரசிகர்கள் அதிருப்தியில் இருந்தனர்.
இந்த நிலையில், திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலி, ரஜினியின் அறிக்கை குறித்து, ‘ஹூ ஈஸ் த பிளாக் ஷீப்’ என்ற தலைப்பில், ஒரு ரசிகன் கேள்வி கேட்பது போல ரஜினியை கடுமையாக விமர்சித்து கட்டுரை வெளியிட்டது.
ரஜினிகாந்தை பதற வைத்த திமுக: யுத்தம் ஆரம்பம்
இந்த கட்டுரை ரஜினியின் அரசியல் வருகையை தேவையில்லாமல் கடுமையாக விமர்சித்திருப்பதாக எதிர்ப்புகள் எழுந்தது. திமுக கழகத்தில் உள்ள சிலரே, 'ரஜினி நம்மை எதிர்த்து பெரிதாக பேசாத போது, நாம் ஏன் அவரை இந்த அளவிற்கு விமர்சிக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பியதாக தெரிகிறது.
இந்நிலையில், முரசொலியின் தலைமை ஆசிரியர் இதற்கான விளக்கத்தை அளித்துள்ளார்.
அந்த விளக்கத்தில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினி குறித்து முரசொலியில் வெளிவந்த கட்டுரை சில நல்ல மனதை புண்படுத்துவதாக இருப்பதாக கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இனி அத்தகைய செய்திகளை வெளியிடுவதில் கவனத்துடன் செயல்படுமாறு ஆசிரியர் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.