Dr Muthulakshmi Reddi birth anniversary; Tamil Nadu govt announces 'Hospital Day': இந்தியாவின் முதல் பெண் மருத்துவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளான ஜூலை 30ம் தேதியை, ஆண்டுதோறும் மருத்துவமனை தினமாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முத்துலட்சுமி ரெட்டி, 1886ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்தார். படிப்பில் சிறந்து விளங்கிய அவர் மருத்துவ படிப்பு படித்து, நாட்டின் முதல் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமை பெற்றார். புகழ்பெற்ற அடையார் புற்றுநோய் மருத்துவமனை இவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவர் மேற்கொண்ட சமூக சேவைகளின் மூலம் அரசியலிலும் காலடிபதித்தார். தமிழக சட்டசபையில் முதல் பெண் எம்.எல்.ஏ. என்ற பெருமையையும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பெற்றார். 1968ம் ஆண்டு இவர் காலமானார்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 133-வது பிறந்த தினம்: டூடுல் போட்டு கௌரவித்த கூகுள்
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் பிறந்தநாளான ஜூலை 30ம் தேதியை, ஆண்டுதோறும் மருத்துவமனை தினமாக கொண்டாட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, மருத்துவமனை தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் உள்ள டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் இதர ஊழியர்கள் தங்களது சேவைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
இந்த தின கொண்டாட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மருத்துவமனைகள் ஆற்றிவரும் சேவைகள் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், சமூக சேவை நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் உதவியுடன் பிரபலப்படுத்த வேண்டும். மேலும் அதிகமானோர், சிகிச்சை பெற அரசு மருத்துவமனைகளை நாடும் அளவிற்கு விளம்பரப்படுத்த வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.