Naam Thamizhar Katchi Cadre kidnaped school students
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தாழக்குடியில், நேற்றுக் காலை 6, 5, 4, 2ம் வகுப்புகளில் படிக்கும் 7 மாணவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளிக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக காரில் வந்தவர்கள் அந்த மாணவர்களை கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து தாழக்குடி, மீனமங்கலம், சந்தவிளை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், தங்கள் குழந்தைகள் பற்றிய தகவல் அறிய தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு படையெடுத்தனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரின் காரில் மாணவர்கள் சென்றதை சிலர் பார்த்து உள்ளனர். உடனே, தாழக்குடி பகுதியைச் சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு சிலர் போன் செய்து பேசினர். அப்போது அவர், கட்சி சார்பில் 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வை கண்டித்து கலெக்டர் அலுவலகம் அருகே நடக்கும் போராட்டத்தில் பங்கேற்க மாணவர்களை காரில் அழைத்து வந்ததாக கூறினார். இதனால் பொதுமக்களுக்கும், அந்த கட்சி பிரமுகருக்கும் இடையே செல்போனிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் மற்றும் நாகர்கோவில் வட்டார கல்வி அலுவலர் ஹரிக்குமார், ஜெயசந்திரன் உள்பட அதிகாரிகள் அங்கு வந்தனர். இதற்கிடையே போலீசார் அந்த கட்சி பிரமுகரை பிடித்து, காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அவர் அந்த கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இணைச்செயலாளர் என தெரியவந்தது.
மீட்கப்பட்ட மாணவர்கள் நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம் மூலம் பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஆனால் பொது மக்கள் அந்த வாகனத்தை முற்றுகையிட்டு குழந்தைகளை கடத்தி சென்றவரை இங்கு அழைத்து வாருங்கள். அப்போதுதான் வாகனத்தை விடுவோம் என்று கூறி மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக போலீசார் காவல் நிலையம் வந்து புகார் கொடுங்கள். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.