Nanguneri Vikravandi by election campaigns highlights : நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் இடைத்தேர்தல் வருகின்ற 21ம் தேதி நடைபெற இருப்பதை ஒட்டி அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக பிரச்சாரம்
நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் திமுக தலைவர் முக ஸ்டாலின். 8ம் தேதி முதல் 11ம் தேதி வரை அங்கு பிரச்சாரம் செய்தார் முக ஸ்டாலின். தற்போது விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று மற்றும் இன்று (11/12 தேதிகளில்) பிரச்சாரம் செய்யும் அவர் மீண்டும் 18 & 19 தேதிகளில் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் மேற்கொள்வார். விக்கிரவாண்டி தொகுதியில் நா. புகழேந்தி வேட்பாளாராக உள்ளார்.
அதிமுக பிரச்சாரம்
சீன அதிபர் ஷி ஜின்பிங் வரவை ஒட்டி மாநில அரசு தங்களின் முழு கவனத்தையும் மாமல்லபுரத்தில் செலுத்தியிருந்ததால் 11ம் தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை அதிமுக. நேற்று (12/10/2019) விக்கிரவாண்டியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்கினார் அவர். 18ம் தேதி வரை நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் தன்னுடைய சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளார் எடப்பாடி பழனிசாமி. நாங்குநேரி தொகுதியில் இன்று ரெட்டியார்பட்டி வி. நாராயணை ஆதரித்து ரெட்டியார்பட்டியில் தன்னுடைய பிரச்சாரத்தை துவங்க உள்ளார் எடப்பாடி பழனிசாமி. விக்கிரவாண்டி தொகுதியில் 16 மற்றும் 18 தேதிகளில் பிரச்சாரத்தில் அவர் ஈடுபட உள்ளார்.
மேலும் படிக்க : ”மோடியின் உத்தரவை நிறைவேற்றும் வேலையைத் தான் முதல்வர் செய்கிறார்” - நாங்குநேரியில் முக ஸ்டாலின்
12/10/2019 தேதி பிரச்சாரத்தின் ஹைலைட்ஸ்
நேற்று விக்கிரவாண்டி முத்தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி “எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவை அதிமுக ஆட்சி நிறைவேற்றி வருகிறது என்று கூறினார். மேலும் உயர்கல்வியில் தமிழகம் முதன்மையான மாநிலமாக விளங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார். அதிமுக அரசு தான் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது” என்றும் அவர் கூறினார். முண்டியம்பாக்கத்தில் துவங்கிய அவரது பிரச்சாரம் ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி, டி.புதுப்பாளையம் என்று நீடித்தது.
திமுக பிரச்சாரம்
எம்.ஜி.ஆர் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர், ஜெயலலிதா மக்களால் தேர்வு செய்யப்பட்டவர், அண்ணா, காமராஜர், பக்தவத்சலம், கலைஞர் அனைவரும் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர். ஆனால் எடப்பாடி ஜெ.வின் மறைவால், விபத்தாக முதல்வரானவர் என்று நாங்குநேரியில் பேசியதை மேற்கோள் காட்டினார். அதற்கு விக்கிரவாண்டியில் எடப்பாடி பதில் அளிக்கும் வகையில் “மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் தான் நான்” என்று கூறியதற்கு பதில் அளிக்கும் வகையில் “காலில் விழுந்து முதல்வரானவர் கூட இங்கு உண்டு. ஆனால் இவரோ சசிகலா காலில் தவழ்ந்து முதல்வரானவார்” என்று காரசாரமாக பிரச்சாரம் மேற்கொண்டார் முக ஸ்டாலின். சசிகலா இவரை முதல்வராக்கினால், இவரோ சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்பட்டவர் என்றால், பதவியை ராஜினாமா செய்துவிட்டு நேரடியாக போட்டியிட தயாரா என்று கேள்வி எழுப்பினார் அவர்.
மேலும் விருதாச்சலம் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் ரவிக்குமாரை வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி கூறினார் முக ஸ்டாலின்.