New cluster at IIT-Madras as 58 test Covid positive : சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிலையத்தில் 17 மாணவர்கள் உட்பட 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 5 முதல் 9 தேதி வரை நடத்தப்பட்ட சோதனைகளில் இவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி கூறும் வழிமுறைகளை பின்பற்றி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று கல்வி நிறுவனத்தின் நிர்வாகம் அறிவித்துவித்துள்ளது.
தடுப்பூசிக்கு பிறகு ஒமிக்ரானுக்கு எதிரான நோயெதிர்ப்பு சக்தி எப்படி உள்ளது? புதிய ஆய்வு முடிவுகள்
திங்கள் கிழமை அன்று மாணவர்கள் அனைவருக்கும் அனுப்பப்பட்ட கடிதத்தில், நோய் தொற்று உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் வழங்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தும் வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் சிலர் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஜனவரி 1ம் தேதி அன்று கல்லூரிக்கு திரும்பிய மாணவர்கள் அனைவரும் ஒரு வாரம் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு கொரோனா சோதனைகளில் நெகடிவ் ரிசல்ட் வந்தால் மட்டுமே வகுப்புகள் மற்றும் ஆய்வகங்களில் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை தேர்ந்தெடுப்பது எப்படி? நிபுணர்கள் விளக்கம்
நிர்வாகம் சார்பில் அமைக்கப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் வார்டில் இதுவரை 33 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த வாரம் நடத்தப்பட்ட சோதனைகளில் பாசிடிவ் முடிவுகளை பெற்ற மாணவர்களை நாங்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தினோம். அவர்களில் பலருக்கும் தொற்று அறிகுறிகள் இல்லை. சிலருக்கு லேசான தாக்கம் மட்டுமே இருந்தது என்று நிர்வாகம் கூறியுள்ளது. கல்லூரி வளாகத்தில் முதன்முறையாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் 66 மாணவர்கள் உட்பட 71 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு முதல் “க்ளஸ்டர்” உருவானது குறிப்பிடத்தக்கது.
மாணவர்களுக்கு நிர்வாகம் எழுதிய கடிதத்தில் வெளி மாநிலங்களில் இருந்து வளாகத்தில் உள்ள விடுதிகளுக்கு திரும்பிய மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்கள் நிர்வாகத்தின் முதன்மை மருத்துவ அதிகாரியிடம் தங்களைப் பற்றிய தகவல்களை அளிக்குமாறு குறிப்பிட்டுள்ளது. மேலும் தனிமைப்படுத்தல் வழிகாட்டு நெறிமுறைகளை அவரிடம் இருந்து பெற்று தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil