New commissioners appointed to six corporations in Tamilnadu: திருச்சி, கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட 6 மாநகராட்சிகளுக்கு புதிதாக ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் திருச்சி, கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் ஆவடி ஆகிய 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இறையன்பு வெளியிட்டுள்ள உத்தரவில், சென்னை மாநகராட்சியில் தெற்கு மண்டல துணை ஆணையராக பணியாற்றி வந்த சிம்ரன்ஜித் சிங் ஐ.ஏ.எஸ், மதுரை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரை மாநகராட்சியில் முன்னதாக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றி வந்த பிரதாப் ஐ.ஏ.எஸ், கோவை மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகராட்சியில் முன்னதாக ராஜகோபால் சுங்கரா ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலராக பணியாற்றி வந்த வைத்தியநாதன் ஐ.ஏ.எஸ், திருச்சி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட இயக்குனராக பணியாற்றி வந்த சிவகிருஷ்ண மூர்த்தி ஐ.ஏ.எஸ், நெல்லை மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சியில் முன்னதாக விஷ்ணுச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.
இதையும் படியுங்கள்: நிஜமான ஆபத்தா, தற்காப்பு ஆட்டமா? ட்விட்டரில் பற்ற வைத்த திருச்சி சிவா மகன்!
கோவை வணிக வரித்துறையில் இணை ஆணையராக பணியாற்றி வந்த ஆனந்த் மோகன் ஐ.ஏ.எஸ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். நாகர்கோவில் மாநகராட்சியில் முன்னதாக ஆனந்த் ஆஷா ஐ.ஏ.எஸ் ஆணையராக பணியாற்றி வந்தார்.
மாநில விருந்தினர் மாளிகையில் இணை அலுவலராக பணியாற்றி வந்த தற்பகராஜ் ஐ.ஏ.எஸ், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.